உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Friday, January 29, 2010
எச்சரிக்கை ! செல்போன்
கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.
இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.
இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.
இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.
Tuesday, January 19, 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள் முன் தோன்றுவார் .
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ச.தமிழ்மாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு,
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார்.தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.
இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன் எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, January 13, 2010
Tuesday, January 12, 2010
Saturday, January 9, 2010
தைப்பொங்கல் திருநாள்
மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.!
“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?
பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.
‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
இதனை சற்று ஆழமாகக் கவனிப்போம்.
பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான்.-என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.
தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங்கணிகள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது.
தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social History of the Tamils-Part 1)
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும்.
தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்.!)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.!
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக (ஜ)யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.
தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.
தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.
பருப்புத் தவிடு பொங்க - பொங்க
அரிசித் தவிடு பொங்க - பொங்க
-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘HONGA-HONGA’ என்றே பாடுகிறார்கள்.
இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.
இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.
“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. . .(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .
- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!
“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!!”
பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.!
தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரறாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
1935ம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.
“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.
ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!
பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி-போகியது- போகி) இத்தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)
தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகு படுத்தல, பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் தைப்பொங்கலின் மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும் புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள் அரங்கேற்ற நிகழ்வுகள் புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.
தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.
மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவர்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும். என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம்.அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Sunday, January 3, 2010
தன்மான தமிழனனின் தகவல்கள் சில ........
பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!"
ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.""பிரபாகரன்
ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார்.
ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள்.
பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!
தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!""
ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!
மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
தகவல் தந்த விகடனுக்கு நன்றி !
Friday, January 1, 2010
வேதாரண்யேசுவரர் கோவில்
வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகஸ்தியன்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகஸ்தியன்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.
இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிப் பூஜித்த விநாயகர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி கோவிலின் பிரகாரத்தில் மேற்கு திசையில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.
தல புராண வரலாறு:
ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.
ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோவில் தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது. தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும் தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்த பயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம்) தெரிவிக்கிறார்.
வேதாரண்யம் கோவில் விளக்கழகு என்பது பழமொழி. வேதாரண்யம் பார்க்கப் போகும் நீங்கள் மாலை நேரத்தில் சென்று அந்த விளக்கழகையும் தரிசித்து இன்புறுங்கள்.
ஆலயம் செல்ல வழி :
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் அகஸ்தியம்பள்ளி சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.வேதாரன்யத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் உள்ளது .
வேதாரன்யத்திலிருந்து