Wednesday, December 30, 2009

புத்தாண்டே வருக !

அன்பிற்கினிய நண்பர்களுக்கும்
வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
- அன்புடன்....
சி . ராஜபாண்டியன்....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


Sunday, December 27, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சிறு குழந்தையின் சிரிப்பு ஒலியில்உலகம் அதிர..

இளைஞர்கள் கனவுகள் நிறைவேற

ஏழை எளியவர்களின் வறுமை ஓழிய

உலகில் அமைதி நிகழ்ந்து

இயற்கையின் கோபம் தணிந்து

பூக்கள் மலர

இனிய புத்தாண்டு தொடங்கட்டும்......

Thursday, December 17, 2009

“பேராண்மை”




கத்திரிக்காய் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்நேரத்தில் இயற்கை வேளாண்மையின் மேன்மையையும், அவசியத்தையும் வலியுறுத்தி வசனங்கள் வருவதற்காகவே இம்மண்ணை நேசிக்கும் அனைவரின் சார்பாக நாம் பேராண்மை திரைப்படத்துக்கும் அதன் இயக்குநர் ஜனநாதனுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது, இம்மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை. அதை இன்னும் முறைப்படுத்தி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரிவரக் கிடைக்குமாறு செய்வது நல்ல அரசாங்கத்தின் கடமை.

இட ஒதுக்கீடு என்பதே இன்னும் முழுமையாக மக்களுக்கு போய்ச் சேராத நிலையில், இடஒதுக்கீடால் பயனடைந்த சிலரின் சிறுவளர்ச்சியைக்கூட இந்துத்துவ மனோபாவம் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கிறது என்பதை “பேராண்மை” படத்தில் இயக்குனர் தன்னால் இயன்ற அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளார். பழங்குடி மக்களுக்கான அரசியலை அந்த மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபட வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஜனநாதனைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.

பழங்குடி மக்களிடமிருந்து ஒருவன் படித்து மேல்நிலைக்கு வருவதை, சராசரி “இந்துத்துவ மனநிலை” ஏற்க மறுப்பதும் அதைக் கதாநாயகன் எதிர்கொள்வதும்தான் கதையின் முக்கிய அம்சம். சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் விளிம்பு நிலையிலிருக்கும் கதாநாயகன், இம்மண்ணின் விவசாய நிலம் மலடாக்கப்படுதல், அந்நிய ஆக்கிரமிப்பு, அரசியல், பொருளாதாரச் சீர்த்திருத்தம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்கும் காட்சிகள், சினிமா இரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் புதிதுதான். ஏழைகளுக்காகவும், சேரி மக்களுக்காகவும் பாடுபடுவது போல எம்.ஜி.ஆர். அதிக படங்களில் நடித்துள்ளார். ஆனால் அத்திரைப்படங்களில் அவர் ஒரு பணக்காரராகவும், உயர்சாதியினராகவும் இருந்து, அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடும் கடவுளாக காட்டப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் அரசியலை எசமான விசுவாசத்தோடு இருக்க வைத்ததற்கு இத்தகையத் திரைப்படப் போக்குகள் பெரிதும் உதவின. ஆனால் உண்மையான ஒடுக்கப்பட்டோர் அரசியலை ஒடுக்கப்பட்டோரின் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்கிற சரியான பார்வையைத் திரையுலகில் முதலில் கொண்டுவந்தவர் என்கிற பெருமை இயக்குநர் ஜனநாதனையே சாரும்.

பெண்களை ஆயுதம் பயன்படுத்தத் தெரிந்தவர்களாகவும், அதீதத் துணிச்சல்காரர்களாகவும், ஆணுக்கு எந்த ஒரு புள்ளியிலும் சளைக்காதவர்களாகவும் சர்வசாதரணமாகத் திரையில் கையாண்டிருப்பது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. போர்க்காட்சியில் கதாநாயகன் ‘நான் இறந்துட்டா நீங்க போரை நடத்திப் பொதுவுடமை சமூகத்தை நிலைநாட்டுங்கள்’ என்று சொல்லும் காட்சியில் சமூக மாற்றத்துக்கான அனைத்துச் செய்திகளையும் இந்த ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்கிற இயக்குநரின் ஆசையையும், தவிப்பையும் உணர்கிறோம்.

மனிதர்களின் சாதியையும், மதத்தையும் சுட்டிக் காட்டியே வாழ்பவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் என்பதைக் கதாநாயகனுக்கு மேலதிகாரியாக வரும் கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்டோர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டினால்தான் தனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்று அறிவிற்குப் புறம்பாக புலம்பிக் கொண்டே காலம் தள்ளும் ஒடுக்குஞ் சாதியினருக்கு சரியான பாடத்தை அந்த கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகனிடம் பாடம் கற்கும் மாணவிகளில் எல்லோரும் அவனது பிறப்பை வைத்து அவனை வெறுத்து ஒதுக்க, ஒரே ஒரு இசுலாமியப் பெண் மட்டும் அவனது அறிவையும், ஆற்றலையும் கண்டு வியந்து அவனை விரும்புவது போல் காட்சியமைத்திருப்பது, சிறுபான்மைச் சமூகம், இந்துத்துவ மனநிலையிலிருந்து சற்று விலகியிருப்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம். கதாநாயகன் மாணவிகளிடம் ‘நான் ஆங்கிலம் பேசினா என் மக்களுக்குப் புரியாது, உங்களுக்குப் பிடிக்காது’ என்று சொல்லும் காட்சியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆதிக்க மனநிலைக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

“கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்ற அம்பேத்கர் அவர்களின் கொள்கை முழக்கங்களை அச்சிட்டே இப்படத்தின் தொடக்க விழா நடந்தது. ஆனால் மனுதர்மத்தைப் பற்றிய அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைக் கூட என்னால் இப்படத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்று ஜனநாதன் அவர்கள் தொலைக்காட்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனநாதன் அவர்களே! சட்டக் கல்வி படிக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களே இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் படமோ, பெயரோ கல்லூரியில் இருக்கக் கூடாது என்ற இந்துத்துவத் தீண்டாமை மன நிலையில் இருக்கும்போது, அந்த இந்துத்துவ மனநிலையை வளர்த்தெடுக்க உதவும் இந்த இந்தியத் தேசிய அரசாங்கம், எப்படி அம்பேத்கரின் மனுதர்ம விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் ?.

மார்க்சையும், ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் படித்து வளரும் கதாநாயகன், தனது மேலதிகாரியின் வக்கிரமான பேச்சுக்கும், கேவலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் அடங்கிப்போவது போல் படம் முழுக்கக் காண்பித்திருப்பது நமக்கு நெருடலாக உள்ளது. அடங்கிப் போகவா மார்க்சும், பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள்? மார்க்சிய சிந்தனை கொண்ட கதாநாயகனிடமிருந்து சின்ன பதிலடி கூட இல்லாமல் காட்சிகள் இருப்பது ஒரு குறைதான்.

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான வசனங்கள், மனுதர்ம விமர்சனம் போன்ற அனைத்தும் தணிக்கைக் குழுவினரால் வெட்டியெறியப்பட்டு விட்டது என்பது வேதனைக்குரிய செய்தி. தமிழ்நாட்டிற்கென்று தமிழ்த் திரைக்கென்று தனியாகத், தணிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்க் கலைஞர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழரல்லாதவர்களின் கையில் இருக்கக் கூடாது.

தணிக்கைக் குழுவினர் சில வசனங்களை வெட்டியெறிந்ததைப் போலவே, தணிக்கை குழு அனுமதித்த சில வசனங்களை நாம் வெட்டியெறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆபாச இரட்டைப் பொருள் வசனங்களை மட்டும் நாம் சொல்லவில்லை. இதோ:

“இந்திய தேசத்தைக் காப்பேன்!

என் உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தைக் காப்பேன் !!”

ஆண்டாண்டு காலமாக, இந்த “இந்தியத் தேசம்” நம் மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருப்பது போதாது என்று நாம் வேறு விரும்பி உயிரைக் கொடுக்க வேண்டுமாம்! (ஜனநாதன் அவர்களின் இக்கட்டான சூழ்நிலை நமக்குப் புரிகிறது). இந்த வசனங்களை மட்டும் நாம் தணிக்கை செய்து விட்டுப் பார்த்தால் “பேராண்மை” பேசப்பட வேண்டிய பேருண்மை.

(சமுக நீதித் தமிழ்த் தேசம் நவம்பர் 2009 இதழில் வெளிவந்த விமர்சனம்)



Saturday, December 12, 2009

கண்ணீர் அஞ்சலி !



கள்ளங் கபடமற்ற
சின்னஞ் சிறுசுகளே -
எதை உணர்த்துவதற்காக
எம்மை விட்டு பிரிந்தீர்களோ ,
அதை உணர்ந்து
மாற்றத்தை கொண்டு வருவதே
உங்களுக்கு செய்யும்
உண்மை அஞ்சலி .

Thursday, December 3, 2009

பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; மொபைலில் பேசியபடியே வந்த வேன் டிரைவர் !












நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி ‌வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.


நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மெகா மெட்ரிக்., மழலை பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்‌நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் , எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.


ஆசிரியையும் பலி: இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் பலரை உயிருக்கு போராடிய நிலையில் மீட்டுள்ளனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


மொபைல் பேசி வந்த வேன் டிரைவர் : இந்த ‌வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். ‌மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் ‌என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மருத்துவ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு : இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.


நிவாரணம் அறிவிப்பு : இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஆத்தூரில் மற்‌றொரு விபத்து: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்ற பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். ஆத்தூர் அருகே சரஸ்வதி மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இதில் 18 பேர் தான் பயணிக்க முடியும். ஆனால் 30 ‌பேரை ஏற்றி சென்றுள்ளனர். நரிக்குறவன் காலனி அருகே நிலைதடுமாறிய வேன் தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். டிரைவர் உள்பட 5 பேர் நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமுற்றவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி நிற்கின்றனர்.


விபத்தில் இறந்தவர்கள் விவரம் : விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் தெரிய வந்துள்ளது. கார்த்திகேயன் மகன்கள் ; ஜெயப்பிரகாஷ் ( 1 ம் வகுப்பு ) , ஜெயசூர்யா ( யு.கே.ஜி.,), அஜய் ( யு.கே.ஜி.,), விஜிலா ( யு.கே.ஜி.,), ஹரிகரன் ( எல்.கே.ஜி.,), ஈஸ்வரி ( 2 ம் வகுப்பு ), அபிநயா , மகாலட்சுமி . ஆசிரியை பெயர் சுகந்தி இவர் கட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர்.


மாவட்ட ‌கலெக்டர் ஆறுதல் : சம்பவம் நடந்த இடத்திற்கு கலெக்டர் முனியநாதன், மாவட்ட எஸ். பி., ‌மகேஸ்வரன், வேதாரண்யம் எம்.எல்.ஏ., வேதரத்தினம் மற்றும் அதிகாரிகள் சென்றனர். விபத்து நடந்தது குறித்து விசாரித்தனர். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.


தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏதும் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு நிர்வாகம் உஷாராக இருந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள் சிக்கியது.

- தினமலர் (03.12.2009)

Tuesday, December 1, 2009

உயிர்








உயிருடன் இருக்கும் பொழுது ,
உணர்ச்சியற்று இருக்கும் நம் மக்கள்,
உயிரில்லாத பொழுது மட்டும் ஏன்,
உணர்ச்சி பொங்க அழுகிறார்கள் ;
உயிரில்லாத உடலை பார்த்து . . .

Friday, November 27, 2009

சேகுவேரா


சேகுவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
மார்க்சியத்தில் ஈடுபாடு
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.கியூபாவில் புரட்சிசில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.பொலிவியாவில் சேகுவேராபொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.
இளமைக்காலம்சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

Thursday, November 26, 2009

காசிஆனந்தன் கதைகள்

குருவிக்கூடு
சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன. மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.குஞ்சுகள் கவனிக்கவில்லை. பாம்புக்கு இது வாய்ப்பானது.குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்நுழைந்தது.நொடிப்பொழுதில்-பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின். அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.அது மீண்டும் இரைந்து கத்தியது.
“சிறகு விரி
பிறகு சிரி”

உயர்வு

காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....' என்று தன் பெருமையை பறைசாற்றியது.பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.கொஞ்ச நேரத்தில்ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..

"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்.!! !"

சுவாமி விவேகானந்தர்:
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். லியோ

டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. அப்ரஹாம் லிங்கன்:கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டின்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.அப்ரஹாம் லிங்கன்

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.- அக்னஸ் றெப்லையர்

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.- பிலிப் குறொஸ்பி

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.- பேர்ள் எஸ். பக்

புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.- மார்கஸ் அரேலியஸ்

எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.- எமர்சன்

உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.- எலனொர் றூஸ்வெல்ற்

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?நான் என்ன செய்ய வேண்டும்?இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.- நதானியல் பிராண்டன்

கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம்என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- நெப்போலியன் ஹில்

Wednesday, November 25, 2009

அறிவு வேண்டுமானால் ஆய்வு கூடங்களில் பிறக்கலாம்!
துணிவு போராட்டக் களங்களில்தான் பிறக்கும். -கி.வீரமணி

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.


Sunday, November 22, 2009

உன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்

ஏ
இளைஞனே!
வாழ்க்கை
ஒரு புன்னகைத்


திருவிழா!
அதில் நீ ஏன்
கண்ணீர் கவிதை
வாசிக்கிறாய்?

விழிகளில்
வழியும்
வியர்வையை
துடை
புன்னகை
உடுத்து

கவலை இருளில்
கரையும்
உனக்கோர்
கவிதை
தீக்குச்சி
கிழிக்கிறேன்
வா!

மூலையில்
சேமித்த உன்
மூளையை
செலவாக்கு
விஞ்ஞானிபோல்
புத்தி செதுக்கு
மெய்ஞானிபோல்
ஆன்மா துலக்கு
அன்பு ஒன்றுதான்
வாழ்வின் இலக்கு

எதிர்வரும்
தடைகளை
விலக்கு
இனி வெளுக்கும்
உன் கிழக்கு

தோல்வி துளைகளில்
தான் வெற்றிப்
புல்லாங்குழல்
வாசிக்க முடியும்

எனவே தோல்வி கண்டு துவண்டு விடாதே!

விழுவதெல்லாம்
எழுவதற்குத்தான்
நீ புண்படுவதெல்லாம்
பண்படுவதற்குத்தான்.
குப்பை கிளறித்
திரிய கோழி
அல்ல நீ
குன்றின் மேல்
கூடுகட்டும் ராஜாளி!

வாழ்வைப் பிழிந்து
அனுபவம் அருந்து
உழைப்பு ஒன்றுதான்
உன் கண்ணீருக்கு
மருந்து!
தேன்துளி
அல்ல நீ
தித்திப்போடு
முடிந்திட
தீத்துளி!
மழைத்துளி
அல்ல நீ
மண்ணில்
வீழ்ந்ததும்
மறைந்திட
மனிதத் துளி!

நின்றுகேள்
ஒன்று சொல்வேன்

நீ எந்த
சிகரத்தின்
உச்சி தொட்டாலும்
சரி
மனித நேசம்
மறந்துவிடாதே

அச்சம் தவிர்
அறியாமை அகற்று
நம்பிக்கை கொள்
உன் உள்ளங்கைக்குள்
உலகம் சுழலும்.

Tuesday, November 17, 2009

Kodiyakkarai beautiful places

















நான் ஒரு வேலை காரணமாக பேருந்தில் சென்றுகொண்டிருண்டேன். காலை நேரம் ஆதலால் பேருந்தில் சற்று அதிகமாகாவே நெரிசல். நான் மிகவும் போராடி பேருந்தின் நடுவில் ஒரு இருக்கையின் அருகில் நின்றுகொண்டேன்.
எனது அருகில் 65 வயது பாட்டி நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், நான் நின்றிருந்த அருகில் சீட் காலியானது. நான் அந்த பாட்டியை உட்காரச்சொன்னேன்.
ஆனால்,
அவர் பின்னாடி யாரயோ அழைப்பது போல் தொன்றியாது. அவர் அழைத்தது அவரது கனவர். 70 வயதிருக்கும் அவர் உடல்நிலை சரியில்லாதவர் போலும். மிகுந்த அயர்ச்சியாக காணப்பட்டார்.
அவர் மிகவும் சிரமப்பட்டு பின்னாலிருந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த பாட்டி நின்று கொண்டே பயணித்தார்.

நான் பார்த்து இதைத்தான் என்றாலும்,
எத்தனை ஆழமான காதல் இருவருக்கும்.அந்த பாட்டி நினைத்திருந்தால் தாராளமாக அந்த இருக்கையில் அமர்ந்திருக்கலாம்.

ஆனால் இது எப்படி...?
அப்போது தோன்றியது எனக்கு,
இதுதான் காதலோ என்று...

Monday, November 16, 2009

வந்தே மாதரம் – தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருஅபெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! அப்பா என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்

திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்

வந்தே மாதரம் – பாரதியார்
பல்லவி
வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே
)