Thursday, June 30, 2011

தமிழ் வலைப்பதிவு திரட்டிகள்

1.தமிழ்10
http://tamil10.com

2.இன்ட்லி
http://ta.indli.com

3.போகி
http://bogy.in

4.ந்யூஸ் பானை
http://newspaanai.com

5.இ தமிழ்
http://etamil.net

6.தமிழ் பெஸ்ட்
http://thamilbest.com

7.உலவு
http://ulavu.com

8.தமிழ் டெய்லி
http://tamildaily.com

9.தமிழர்கள் ப்ளாக்ஸ்
http://tamilarkalblogs.com

10.தமிழ்வெளி
http://tamilveli.com

11.வலைப்பூக்கள்
http://valaipookkal.com

12.பகலவன்
http://periyarl.com

13.வலையகம்
http://valaiyakam.com

14.நம்குரல்
http://namkural.com

15.தமிழ்மணம்
http://tamilmanam.com

16.நறுமுகை
http://narumugai.com/directory/index.php

17.தலைவன்
http://thalaivan.com

18.யாழ்தேவி
http://yaaldevi.com

--

தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் பிரதமருக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை


இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா நிர்பந்தித்து வருவதாக பிரதமர் கூறியிருப்பது ஏமாற்றுப் பேச்சு என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஒருபோதும் தங்களை இந்தியா நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ச கூறி, அது ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், யார் கூறுவது சரி என்று நெடுமாறன் வினா எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

"இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

ஆனால் நேற்றைய தினம் "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே தெரிவித்திருக்கிறார். யார் கூறுவது உண்மை? என்ற ஐயம் எழுந்திருக்கிறது. இராசபக்சே தெரிவித்திருக்கிற கருத்தை இந்தியப் பிரதமர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

இலங்கையில் போர் உச்சக் கட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்குக் கூறியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் இராசபக்சே அதை மறுத்தார். இந்தியா ஒருபோதும் செய்யும்படி கேட்கவில்லை என பகிரங்கமாகக் கூறினார்.

அதைப் போல இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியா செய்யவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் இந்தியா செய்த உதவியால்தான் தாங்கள் வெற்றிபெற முடிந்தது என இராசபச்சே போர் முடிந்தபிறகு பகிரங்கமாகக் கூறினார்.

இவ்வாறு தங்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். எனவே தான் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பித்தார்கள். இன்னமும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Tuesday, June 28, 2011

சமச்சீர் கல்வி

எதைத் தந்தாலும் சூத்திர-பஞ்சம சாதியார்க்குத் துப்புரவாய்க் கல்வி தரக்கூடாது என்பது ‘மனுநீதி’யின் உயிரான தத்துவங்களில் ஒன்று. இதைச் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்கு வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் பெரியார். பட்டியல் இன மக்களுக்கு எல்லாம் செய்தவர் மாமேதை அம்பேத்கர். நீதிக்கட்சியும், தன்னலமற்ற அக்கட்சியின் தலைவர்களும், காமராசரும் தமிழகத்தில் காங்கிரசுக்குப்பின் ஆளவந்த திராவிடக் கட்சிகளும் பரந்துபட்ட மக்களுக்குக் கல்வி வழங்குவதில் தனிக்கவனம் செலுத்தின.

என்றாலும், தனியார் மயம், உலக மயத்தின் தாக்குதல் இங்கே தொடங்கியபின் கல்வியைத் தனி யாருக்கு ஒதுக்கிவிட்டு, அவர்கள் அதை விற்பனை செய்ததை எல்லா அரசுகளும் வேடிக்கை பார்த்தன. அதன்விளைவுதான் நாடெங்கும் புற்றீசல் போல் பெருகிவிட்ட பணம் பறிக்கும் தனியார் மற்றும் மெட்ரி குலேசன் உள்ளிட்ட பள்ளிகளாகும். இக்கொள்கை யைத் தடுத்துநிறுத்தவும் அடிப்படைக் கல்வியிலேயே பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதை ஒழித்துகட்டவும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர்.

இதனை ஏற்று, கடந்த முறை ஆட்சியில் இருந்த கலைஞர் அரசு சமச்சீர் கல்வி முறைபற்றி ஆய்வு செய்ய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அந்தக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுச் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த கலைஞர் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அச்சட்டத்தின்படி 2010-2011ஆம் கல்வியாண்டில் 1 முதல் 6 வகுப்பு வரையி லான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-2012-ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரையிலான இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முன் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் ரூ.200 கோடிச் செலவில் 9 கோடிப் பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் செயலலிதா தலைமையில் அமைந்த புதிய அரசு கடந்த 22.5.2011இல் கூட்டிய தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதென முடிவு செய்துள்ளது. அதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ‘இப்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பாடத் திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத் தையும் உயர்த்திட வழிவகை செய்யாது. எனவே கல்வித் தரத்தை மிகச் செம்மையாக நடைமுறைப் படுத்த மீண்டும் வேறொரு குழுவை அமைத்து ஆராய வேண்டும். அதுவரை பழைய பாடநூல் களையே இந்தக் கல்வி ஆண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான அளவில் பாடநூல்களை அச்சிடப் போதுமான கால நேரம் இல்லாமையால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் சூன் 15ஆம் தேதி திறக்கப்படும்’ என்று கூறியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்னும் வழக்குரைஞர் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைக்கும் இந்த முடிவை எதிர்த் தும், தொடர்ந்து சமச்சீர் கல்வியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

நீதிபதிகள் எஸ். இராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் இந்த வழக்குத் தொடர்பாக விடையளித்த தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருட்டிணன் “பல் வேறு பாடத்திட்ட முறைகளில் இருந்து தங்களுக்கான சிறந்த பாடத்திட்டத்தைத் தேர்வு செய்து கொள்வ தற்குத் தமக்கு வாய்ப்பு இருக்க வேண்டுமென பெற் றோர்களும் மாணவர்களும் விரும்புகின்றனர். இந் நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்திச் செய்ய முடியாது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கக் கூடியது. எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

‘மாணவர்களுக்குப் பயன்தரும் நல்ல கல்வித் திட்டம் எது என்பதையும், எந்த மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்கிற அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. இவற்றைப் பெற்றோர்கள் தீர்மானிக்கக் கூடாது’ என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார்.

இந்நிலையில் சமச்சீர் கல்வி முறையைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வண்ணம் பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேசாசலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் பி. வில்சன், தற்போது நடைமுறை யில் உள்ள சமச்சீர்கல்வி முறை தமிழகச் சட்டப் பேரவை நிறைவேற்றிய ஒரு சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படுவதாகும். இதனை அமைச்சரவைக் கூட்டம் ஒன்றின் கொள்கை முடிவால் நிறுத்தி வைக்க முடியுமா?

மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து அப்போதே பல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன. என்றாலும் தமிழக அரசின் இந்தச் சட்டத்தை உறுதிப்படுத்தி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமைச்சரவையின் ஒரு கொள்கை முடிவால் தடுத்துவிட முடியுமா? மேலும் தமிழக அரசின் இந்தச் சமச்சீர் கல்விச் சட்டத்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. முந்தைய அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவை, அடுத்துப் பொறுப்புக்கு வரும் அரசு மாற்று வது நல்லதல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது’ என-தன் வாதங்களைத் முன் வைத்தார்.

உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதிகளும் ‘சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட ஆய்வுக்குழு, விரிவாக ஆய்வு செய்த பிறகே, சமச்சீர் கல்வி முறையை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதனை யாரும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. மேலும் முந்தைய அரசின் சார்பில் இதற்கென ஒரு பெருந் தொகை செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெருந் தொகையை மீண்டும் செலவிடுவது தேவையானது தானா? இவை பற்றியெல்லாம் ஆய்வு செய்து அரசு வழக்குரைஞர் தனது எண்ணத்தை அரசுக்குச் சொல்ல வேண்டும்’ என்று கருத்துரைத்துள்ளனர். இவ்வழக்கு சூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தமிழக முதலமைச்சர், முன்பிருந்த முதல்வரைப் போல குழப்பவாதியல்ல. ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற தன்மையில் எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக் கூடியவர். வெளிப்படையாகவே அவர் தமிழ்வழிக் கல்விக்கு எதிரானவர். 2001-2006இல் இவர் ஆட்சியிலிருந்தபோது வெளிப்படையாக ஆங்கிலமே பயிற்சி மொழி எனத் தீர்ப்புப் பெற்றவர்.

கருணாநிதி முதல்வராய் இருந்த நேரத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழை ஒரு பாடமொழியாய் அறிமுகப்படுத்தி ஓர் அரசாணை இயற்றினார். இஃது மிகமிகச் சாதாரணமான ஒன்று. தமிழ்நாட்டின் கல்விக் கொள்ளையர்கள், பார்ப்பனிய மேல்சாதிச் சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட மலட்டு மண்டையர் தவிர மற்றெல்லாரும், எல்லாக் கட்சித் தலைவர்களும் இந்த அரசாணையை வரவேற்றனர். ஆனால் அன்று இந்த அரசாணையை எதிர்த்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் செயலலிதா தான்.

தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகும் இந்த அம்மையார் தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் இருந்தாலும் அல்லது தனது வீட்டில் இருந்தாலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெரும்பாலும் தமிழில் பேசமாட்டார். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு ஆளுநர் நிகழ்த்தும் உரையைத் தமிழில் மொழி பெயர்த்துப் படிக்க நேரம் ஒதுக்கமாட்டார். தொண்டர்கள் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டினால் தமிழ்ப் பெயர்கள் வைக்கமாட்டார். இப்படிப் பல செய்திகளில் இவர் தமிழ் மரபோடு ஒட்டவேமாட்டார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோக்கும் போது, இவர் தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத் தை நிறுத்தி வைத்துள்ளது எவ்வகையிலும் வியப்பிற் குரியதன்று. “நிறுத்தி வைப்பு” என்பதே குழி தோண்டிப் புதைப்பதற்கான முன்னோட்டந்தான்.

சமச்சீர் கல்வி முறையின் அமலை நிறுத்தி வைக்க முடிவு செய்த அமைச்சரவை, கல்வித் தரத்தை உயர்த்த புதியதோர் வல்லுநர் குழுவை அமைக்கப் போவதாக முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.

தமிழக அரசு, அரசாணை நிலை எண்.159 நாள் 8.9.2006இன்படி அமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி முறை குறித்த ஆய்வுக் குழுவில் கீழ்க்காணும் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

1. டாக்டர் ச. முத்துக்குமரன் தலைவர்

முன்னாள் துணைவேந்தர்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

2. டி. கிருஸ்துதாஸ் உறுப்பினர்

தலைவர், தமிழ்நாடு நர்சரி,

பிரைமரி மெட்ரிகுலேசன் மற்றும்

உயர்நிலைப் பள்ளிகளின்

மேலாண்மைக் குழு

3. சகோதரர். ஜார்ஜ் உறுப்பினர்

மான்ட் போர்டு பள்ளி, ஏற்காடு

4. எம்.எஸ். காஜா முகைதீன் உறுப்பினர்

தலைமையாசிரியர், நிஜாம் ஓரியண்டல்

மேனிலைப்பள்ளி, புதுக்கோட்டை

5. டாக்டர் எஸ்.எஸ்.இராசகோபாலன் உறுப்பினர்

தலைமையாசிரியர் (ஓய்வு),

சர்வ ஜன மேனிலைப்பள்ளி, கோவை

6. ஜெ. உமாமகேசுவரி அலுவல்வழி

தொடக்கக் கல்வி இயக்குநர் உறுப்பினர்

7. தெ. செகந்நாதன் அலுவல்வழி

மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் உறுப்பினர்

8. வசந்தி ஜீவானந்தம் அலுவல்வழி

அரசுத் தேர்வுகள் இயக்குநர் உறுப்பினர்

9. இரா. கண்ணன் அலுவல்வழி

பள்ளிக் கல்வி இயக்குநர் உறுப்பினர்-

செயலர் மற்றும்

நடத்துபவர்

இக்குழு தமிழகம் முழுவதும் பயணம் மேற் கொண்டது. 1. நர்சரி கல்வி முறை, 2. மெட்ரிகுலேசன் கல்வி முறை 3. ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, 4. ஓரியண்டல் கல்வி முறை, 5. மாநில வாரியக் கல்வி முறை ஆகிய அனைத்துக் கல்வியிலும் கற்பிக்கப்படும் பள்ளிகளைப் பார்வையிட்டது.

தன்னுடைய குழுவின் முடிவு ஒருபக்கச் சார்பாக இருந்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடுதான் தமிழ்வழிக் கல்வியைக் கேலி பேசும் அரைவேக் காடுகளையும் காசு பண்ணுவதையே ‘அறத்தொண் டாக’ ஏற்றுக் ‘கல்வி வள்ளல்’களாக உலாவரும் போலிகளையும் குழு உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டது.

“பல்வேறு பாடத்திட்ட முறைகளில் இருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெற்றோர் மாணவர் விருப்பம். ஒரு பாடத்திட்ட முறையில்தான் படிக்க வேண்டுமென எந்தவொரு மாணவனையும் அரசு கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடியது” என்றெல்லாம் இன்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். தனியார்ப் பள்ளி பணமுதலைகள் காலங்காலமாக அழுது புலம்பும் அதே ஒப்பாரிப் பாட்டை அரசு வழக்குரைஞரும் பாடி யிருக்கிறார்.

சமச்சீர் கல்வியின் பாடத் திட்டங்கள் சாரமற்ற சக்கைகள். தரமில்லாதவை. தேசியத் தரத்துக்கு உயர்த்தாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிப்பவை என்கிற போலித்தனமான வாதத்தை முத்துக்குமரன் குழு அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து தோலுரித்துள்ளது.

தொடக்கக் கல்வி நிலையில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிக பாடச்சுமை காரணமாய்ப் புரிதலின்றியும், மகிழ்ச்சி இன்றியுமே தாங்கள் படிப்ப தாகக் கூறினார்கள். இவர்கள் பெற்றோர் உதவியின்றி வீட்டுப் பாடங்களை முடிக்க முடிவதில்லை என்பது பொதுவான கருத்து. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி” பாடல்கள் வெகுவேகமாக நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படாமலேயே ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் என்று பல பெற்றோர்கள் குறைபடுவதாகக் முத்துக் குமரன் குழுவின் அறிக்கை கூறுகிறது.

தனியார்ப் பள்ளிக் கல்வி வணிகர்கள் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழியாக மட்டுமே கணிச மான அளவில் கொள்ளையடிக்க, பொதிகளைப் போல் கனக்கும் புத்தகச் சுமைகளை மாணவப் பூங்கொத்து களின் முதுகில் ஏற்றுகிறார்கள். அந்தப் பாடநூல் களைக் கற்பிக்கும் திறமான ஆசிரியர்களைத் தம் பள்ளிகளில் அமர்த்தாமல், கொத்தடிமைகளைக் கொண்டு வந்து, சீருடை ஒன்றை மாட்டி ஆசிரியர்கள் என்ற பேரில் கரும்பலகைமுன் நிறுத்தி விடுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளைவிடத் தங்கள் பள்ளிகள் தர மானவை என்று மார்தட்டிக் கொள்ளும் தனியார்ப் பள்ளி நிர்வாகிகள், பள்ளி நேரம் போக, மீதி நேரத் திலும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களையே மடக்கிப் போட்டுத் தனிப்பாடம் என்ற பெயரில் மேலும் சுரண்டுகிறார்கள். இவையும் போதாதென்று பேராசை பிடித்த பெற்றோர்கள் தம் குழந்தைகளைச் சிறப்புப் பயிற்சி என்ற பேரால் பிற இடங்களுக்கு அனுப்பி வதைக்கிறார்கள்.

‘அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கற்பித்தல் தரமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தனியார்ப் பள்ளிகளிலும் வகுப்பு முடிந்தபின் தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அங்குப் படிக்கும் மாணவர்கூட பள்ளிக்கு வெளியே தேர்வு எழுதப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேர்ந்து தனிப்பயிற்சி பெறுகின் றனர். அதாவது தேவையான மாணவர்க்கு மட்டுமே தனி வகுப்புகள் என்ற நிலைமாறி எல்லா மாணவர்க் குமே தனியாகக் கட்டணம் செலுத்திப் பாடம் கற்பித்தல் தேவை என்ற நிலை இன்றுள்ளது. இது ஒரு சமுதாயக் கேடு என்றால் மிகையாகாது’ என முத்துக்குமரன் குழு தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இக்கேடுகளுக்கெல்லாம் காரணம் என்ன?

* பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமை ஆக்காமை.

* பள்ளிக்கல்வி முழுமையையும் அரசு தன் கட்டுப் பாட்டில் ஏற்காமை.

* வகுப்புக்கு ஓர் ஆசிரியர் அமர்த்தாமை.

* எல்லாப் பாடங்களுக்கும் தகுதி பெற்ற ஆசிரியர் அமர்த்தாமை.

* கல்வி தாய்மொழியில் வழங்கப்படாமை.

* தேசிய உற்பத்தியில் கல்விக்குப் போதிய நிதி ஒதுக்காமை.

* வசதிக்கேற்ற பள்ளிகளில் படிப்பதை அரசே ஊக்கு விக்கும் இழிவான நிலை.

‘நம் காலத்தில் நாம்தான் படிக்கவில்லை. நம் குழந்தைகளுக்கேனும் நல்ல தரமான படிப் பைப் பெற்றுத்தருவோமே’ என்று எண்ணும் பெற்றோர்களின் கவலையைக் கல்வி வணிகர் கள் காசாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்ளைக்கு ஆட்சியாளர்கள் அரணாக நிற்கிறார்கள். நேற்றைய ஆளுங்கட்சி இன்றைய எதிர்க்கட்சி - இன்றைய எதிர்க்கட்சி, நாளைய ஆளுங்கட்சி. இதில் எல்லாக் கட்சியிலும் கல்விக் கடை நடத்தும் வணிகர்கள் நிரம்பி வழிகிறார்கள். எனவே புதிய அரசின் அறிவிப்பு அவர்கள் எல்லோருடைய வயிற்றிலும் பால் வார்த்துள்ளது. எளிய மக்களின் தலையில் நெருப்பைக் கொட்டியுள்ளது.

மக்களின் விழிப்புணர்ச்சியும், எஃகு போன்ற மன உறுதியும் எல்லாத் தடைகளையும் தகர்க் கும் ஆற்றல் வாய்ந்தவையாகும். சமச்சீர் கல்விக்கான தடைகளையும் தகர்த்து முன்னேற வேண் டும். சமச்சீர் கல்விகூட குறைகளே இல்லாத முழுமையான கல்வியல்ல. இப்போதைக்கு இந்தத் தடையையேனும் தகர்க்க அணிதிரள வேண்டியது மக்கள் கடன்.

- கட்டுரை தந்த சிந்தனையாளர் திரு . தமிழேந்தி அவர்களுக்கு(www.keetru.com) நன்றி

லோக்பால் மசோதா என்றால் என்ன?



லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.



லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.



இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.

Thursday, May 12, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

III. சான்றிதழ் படிப்பு (ITI):
இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.
10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு

Saturday, March 5, 2011

தோப்புக்கரணம் போடுவது ஏன்? தெரியாத உண்மை!

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி
பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

முத்து உருவாகுவது எப்படி ?

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது. முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம். கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம்
உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும். ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின்
மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின்
உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

Wednesday, February 23, 2011

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?

மின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடியும் அதே போல் கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத்திலிருந்து இரும்பை கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்தத்தையும் நாம் அறிவோம் .ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன்னைச்சுற்றி மின்புலத்தையும் , காந்தம் தன்னைச்சுற்றி காந்த புலத்தையும் உருவாக்குகிறது .இந்த மின்புலம் அல்லது காந்தப்புலம் தன்னைச்சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையை செலுத்துகிறது.மின்காந்த புலத்தில் பரவும் ஒரு வகை ஆற்றல் அலை வடிவம் உடையது . மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஒரு வினாடிக்கு 3,00,000 கி .மீ (ம் என்பதற்குள் 3,00,000 கி.மீ ). மின்காந்த அலைகளைக்கொண்டு ரேடியோ , F.M , தூர்தர்ஷன் தரைவழி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பாகின்றன.ரிமோட் , ப்ளுடூத் , WI - FI அனைத்தும் மின்காந்த அலைகளால் இயங்குபவை .
இருவகை மின்காந்த அலைகளை ( நீளம் . சிவப்பு ) வேறுபடுத்துவது அதிர்வெண் எனும் பண்பு . ஒரு குறிப்பிட்ட வினாடியில் ஒரு அலை எவ்வளவு முறை அதிர்கிறது என்பதுதான் அதிர்வெண் . இதன் அலகு ஹெர்ட்ஸ் . ஒரு பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரு முறைதான் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறது. பெண்டுலத்தில் மாற்றம் செய்து ஒரு வினாடிக்கு இருமுறை வர வைக்கலாம் . அப்போது அது இரண்டு ஹெர்ட்ஸ் . ஒளி அலைகளை எடுத்துக்கொள்வோம் ,இவை காற்றில் எளிதில் ஊடுருவும் . மரமோ , சுவரோ தாண்டி செல்வதில்லை .நாம் கண்ணால் காணும் ஒளி அலைகளின் அதிர்வெண் 430-750 டெரா ஹெர்ட்ஸ். ஆனால் இதைவிட குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால் ஒளியால் ஊடுருவ முடியாத இடங்களையும் ஊடுருவமுடியும் . F.M வானொலிகள் அப்படிப்பட்டவை .(85 - 110 மெகா ஹெர்ட்ஸ் வரை ). முழு ரேஞ்ச் அதாவது 110- 85 மெகா ஹெர்ட்ஸ் வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்த பகுதியை பண்பலை பரவல் என்பர். .இந்த அலைப்பரவலுக்கு வெளியே F.M நிகழ்ச்சிகள் தரமுடியாது . அதே போல் செல்போனில் 2G ( குரல் வழி சேவை ) ( 2 G - 2 nd Genaration ) .என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 மெகா ஹெர்ட்ஸ் என்ற 170 மெகா ஹெர்ட்ஸ் அகலமுள்ள அலைப்ப்ரவலில் தரமுடியும் . அதே போல் 3G சேவைகளை ( குரல் . டேட்டா , வீடியோ ) 1920 - 2170 மெகா ஹெர்ட்ஸ் அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும். அலைப்பரவலில் அகலம் குறைவாக இருப்பதால் அதைக்கொஞ்சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும்.எனவே ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். மேலும் ச்பெக்ரத்தை பயன்படுத்துவதில் வேறு சில சிக்கல்களும் உள்ளன . ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கும் இன்னொரு வானொலி நிலையத்துக்கும் இடையில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இருக்க வேண்டும் .அப்போதுதான் நிகழ்ச்சிகள் குழம்பாமல் தெளிவாக இருக்கும். பண்பலை வானொலியில் 25 மெகா ஹெர்ட்ஸ் - யை 0.8 -ஆக பிரித்தால் ஒரு நகரில் சுமார் 30 வானொலி நிலையங்கள் மட்டுமே அமைக்கமுடியும் . அதே போல் 2G சேவை என்றால் ஒரு நகரில் 10 சேவை நிறுவனங்கள் 1800 மெகா ஹெர்ட்ஸ் - யை ஒட்டி இருக்க முடியும் .3G சேவையை எடுத்துக்கொண்டால் 7 -8 பேர்தான் இருக்க முடியும் .இதனால் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம் .

Sunday, January 9, 2011

மர்மங்கள் நிறைந்த ஆழ்கடல்


பூமியின் பரப்பளவில் 70 சதவீதத்திற்கும் மேல் கடல் பரந்து விரிந்துள்ளது. கடலைப் பற்றி இதுவரை தெரிந்த விஷயங்களை விட, தெரியாத விடயங்களே. ஏராளமாக இருக்கின்றன. ஆழ்கடலுக்குள் செல்லச் செல்ல... வியக்க வைக்கும் பல அதிசயங்கள் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆழ்கடலின் அடியில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது.அஙகு 3 முதல் 6 டிகிரி வரையிலான உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. நிலப்பரப்பில் இருப்பதை விட ஆயிரக் கணக்கான மடங்கு அதிகமான அழுத்தமும் இங்கு காணப்படுகிறது.
மனிதன் உயிர் வாழவே முடியாத இத்தகைய சூழ்நிலையில் சில அபூர்வ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரிய கண்களுடனும், பெரிய வாயுடனும், நீண்ட உணர்ச்சி உறுப்புகளுடனும் இருக்கும் ‘பயோலுமினிசென்ட்’ என்ற ஒருவகை மீன்கள் இங்கு வாழ்கின்றன.ஜெல்லி போன்ற உடலமைப்புக் கொண்ட இவை கடலுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்களையும், நுண்ணுயிரிகளையும் உண்டு இவை உயிர் வாழ்கின்றன. பவளங்கள், சிறிய புழுக்கள், சுறா மீன்கள், டிராகன் மீன்கள், மணி வடிவமுள்ள ஜெல்லி மீன்கள் போன்ற மற்ற உயிரினங்களும் கடலின் அடி ஆழத்தில் சுதந்திரமாக வசித்து வருகின்றன.
அறியப்படாத பெருமளவு உயிரினங்கள் இன்னும் கடலுக்குள் புதைந்துள்ளன. கடலின் அந்தரங்கம் குறித்து ஆராய்ந்தால் வியப்பான பல விஷயங்கள் கிடைக்கும்.கடலுக்குள் பாரிய மலைகள்கடலின் ஆழத்தை நேரடியாகக் கண்டறிய முடியாது. ஒலி ஆலைகளின் மூலமாக இந்த ஆழத்தை நிர்ணயிக்கிறார்கள். உலகிலுள்ள முப்பது நாடுகள் ஒன்று சேர்ந்து கடலின் அந்தரங்கத்தை அறிய 1955ல் ஒரு அமைப்பை உருவாக்கின. 1970 ஆம் ஆண்டு வரை கிடைத்த ஆய்வுத் தகவல்களைக் கொண்டு கடலின் தரைப் பகுதி வரைபடமாக உருவாக்கப்பட்டது.பெருங்கடற்பரப்பின் நடுவே சுமார் பதின் மூன்றாயிரம் அடி உயரம், நூறு முதல் நூற்றி இருபது மைல் அகலம் கொண்ட மலைகள் சுமார் நாற்பதாயிரம் மைல்தூரம் பரவியுள்ளன. இது தவிர கண்டத் தீவுகள், கடல் தீவுகள், பவளத் தீவுகள் என்பனவும் நடுக்கடலில் காணப்படுகின்றன.

சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்

முழுப்பெயர்:சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்
பிறப்பு: 24 ஏப்ரல் 1973. பம்பாய் (தற்போது மும்பை), மஹாராஷ்டிரா, இந்தியா
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்
பந்து வீச்சு முறை:வலதுகை சுழற்பந்து வீச்சாளர், இடப்புறமும், வலப்புறமும் சுழன்று திரும்பும் படியான சுழல் வீச்சு (off break, leg break googly). மிதவேக பந்து வீச்சு.
அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்
விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், மும்பை, மும்பை இந்தியன்ஸ், யார்க் ஷையர்
அறிமுகம்: டெஸ்ட் போட்டி: நவம்பர் 15-20, 1989, இந்தியா - பாகிஸ்தான் இடையே கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: டிசம்பர் 18, 1989 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே குர்ஜன்வாலாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.
பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
1990-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஏழு வீரர்களில் ஒருவராவார். அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 11,782 ரன்கள் எடுத்து தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளார். முதல் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னாள் வீரர் பிரையன் லாரா 11,953 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 39 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஒருதினப் போட்டிகளின் சாதனை நாயகன் இவர். அதிக அளவு (417) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (16,361) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (42) சதங்களைக் கடந்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (89) அரை சதங்களைக் கடந்தவர், 417 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (57 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், 96 ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு (13 முறை) தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று அரை இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்றார். இவர், அப்போட்டித் தொடரில் காயம் காரணமாக முதல் பாதி ஆட்டங்களில் விளையாடவில்லை என்றாலும், பிற்பாதி ஆட்டங்களில் அணியை திறம்பட வழிநடத்தினார்.
இவரது ஆட்டமுறை கிரிக்கெட் விளையாட வருபவர்களுக்கு ஒரு பாடம். இவரது நேர்த்தியான பேட்டிங் திறமையால், பிற அணிகளில் உள்ள திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட இவருக்கு பந்து வீசத் திணறுவார்கள்.
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
இத்தொடரின்போது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் லாராவை (11,953 ரன்கள்) சச்சின் முந்துவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இத்தொடரின் துவக்கத்தில் இச்சாதனை படைக்க சச்சினுக்கு 172 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 6 இன்னிங்சிலும் சேர்த்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து, ரசிகர்களை ஏமாற்றினார். தற்போது இவர் 11,877 ரன்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இத்தொடர் முடிவடையும் நேரத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டதால் இலங்கைக்கெதிரான ஒருதினத் தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு அண்மையில்தான் இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.

Friday, September 17, 2010

கடும் எதிர்ப்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு: முறியடிக்கப்படுமா ராஜபக்ஷேக்களின் ராஜதந்திரம்?

நெருப்பை காகிதத்தால் மூடி மறைப்-பதைப் போல சிங்கள அரசு தனது போர்க்குற்றத்தை மறைக்க என்னென்னமோ செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்திய உதவியுடன் சர்வதேச இந்திய பட விழாவை கொழும்பில் நடத்தி தனது ரத்தக் கறையை ஜிகினாவால் மறைக்க முயன்றது இலங்கை. ஆனால், தமிழகத்திலிருந்து எழுந்த வலிமையான எதிர்ப்பு அலைகளால் அந்த படவிழாவை தமிழ், இந்தி நட்சத்திரங்கள் புறக்கணிக்க... தோல்வியில் முடிந்தது விழா. இதையடுத்து இப்போது கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த திட்ட-மிட்டிருக்கிறது சிங்கள அரசு. கருணா, கே.பி. போன்ற தமிழர்களை(?) தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு தமிழ் என்னும் முகத்துடன் சிங்கள அரசு நடத்த திட்டமிடும் இந்த மாநாட்டுக்கும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான தமிழ் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஒன்றுகூடி ஒட்டு மொத்த தமிழுலகத்தின் எதிர்ப்பை வலிமையாக தெரிவித்துள்ளனர். ‘‘தனது கோர முகத்துக்கு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் மூலம் தமிழ் நேச அரிதாரம் பூசிக் காட்ட இலங்கை கடுமையாக முயற்சிக்கிறது. இதை முறியடித்து உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்த கூட்டமைப்பு.இப்படி எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில்... சிங்கள அரசின் திட்டமான இந்த மாநாட்டில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதாக ஈழத் தமிழறிஞர் கா.சிவத்தம்பியைப் பற்றி செய்திகள் சிறகடித்துவந்தன. ஆனால், ‘கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் அதில் கலந்துகொள்ள வேண்டாம்’ என திடீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சிவத்தம்பி.இதுபற்றியெல்லாம் ஈழத் தமிழ் எழுத்தாளரும், கடந்த அறுபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் படைப்பிலக்கிய முன்னோடியுமான எஸ்பொ என்று சுருக்கமாக அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரையிடம் பேசினோம்.‘‘இலங்கையில் தமிழர்களே இருக்கக் கூடாது என வெளிப்படையாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ராஜபக்ஷே சகோதரர்களின் ஆலோசனையின்படிதான் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த தடம் எதுவும் தென்படக் கூடாது என்பதற்-காகவே நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா, ஆடி விழா, எழுத்தாளர் மாநாடு போன்றவற்றை நடத்தி... இலங்கையில் தமிழர்கள் சகஜமாக இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை உலக அரங்கில் உருவாக்கப்பார்க்கிறார்கள் ராஜபக்ஷே சகோதரர்கள். இந்தத் தோற்றத்தை உருவாக்க மகத்தான சாயமாக எழுத்தாளர் மாநாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள் ராஜபக்ஷேக்கள்.
எனக்கு கொழும்பிலிருந்து கிடைத்த நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்னவென்றால்... சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிரான விடயங்களை பிரசுரிக்கவேண்டாம் என்று அனைத்து தினசரிகளையும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஆக, இந்த மாநாடு தனக்கு சாதகமானது என சிங்களனே நினைக்கிறான் என்றால், இதன் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது தெளிவாகிறது. முள்ளிவாய்க்கால் படு-கொலைக்கு சில தினங்கள் முன்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடேசன், லண்டன் பாலசுப்ரமணியன் ஆகியோர் ராஜபக்ஷே சகோதரர்களை சந்தித்து விருந்துண்டு மகிழ்ந்தவர்கள். அவர்கள்தான் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டே தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள்தான் சிங்களனுக்கு சாதகமாக கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என்பது வெளிப்படையாகிவிட்டது’’ என்ற எஸ்பொவிடம்... ‘‘சிவத்தம்பி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?’’ என்று கேட்டோம்.‘‘சமீபகாலமாக சிவத்தம்பி முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார். தமிழ்நாட்டில் நடந்த செம்மொழி மாநாட்டில் கூட முதலில் சிவத்தம்பி பங்கேற்கப்போவதில்லை என்ற நிலையில் இருந்தார். பின் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மாநாட்டில் கலந்துகொண்டார்.அதேபோலத்தான் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு விடயத்திலும் இப்போது முரணான நிலையை மேற்கொண்டிருக்கிறார். அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள், ‘சிவத்தம்பி முன்னிலையில்தான் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டமே நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் சிவத்தம்பி திடீரென மாநாட்டை எதிர்க்கிறார். இந்த விடயத்தில் வரவேற்கத்தகுந்த அவருடைய மன மாற்றத்துக்கு காரணம் தெரியவில்லை.இந்த மாநாடு நடக்கவே கூடாது என்பது எங்கள் எண்ணம் அல்ல. ஆனால், தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஷே சகோதரர்கள் உலக அரங்கில் தங்கள் போர்க்குற்றத்தை மறைத்துக்கொள்ள கேடயமாக கொழும்பில் இந்த மாநாடு நடப்பதைத்தான் எதிர்க்கிறோம்’’ என விரிவாகப் பேசினார் எஸ்பொ.‘பேரழிவு ஆயுதங்களை தமிழனுக்கு எதிராக தூக்கிய ராஜபக்ஷேக்கள், இன்று தமிழனின் பேனாவையே தமிழனுக்கு எதிராக தூக்கத் துணிந்துவிட்டனர். கொழும்பின் கொழுப்பை அடக்க, இந்த மாநாட்டுக்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்படுவது அவசியம்’ என்பதே மிகப் பெரும்பான்மையான தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது

பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர் கூறிய சில கருத்துக்கள்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த.......

காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம், மத்திய கூடுதல் காவற்படை, மாநில காவல் படை ஆகியவற்றை எதிர்த்து அம்மாநில மக்கள், குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் கல்லெறிந்து நடத்திவரும் வன்முறையும், அதனை துப்பாக்கிச் சூடு நடத்தி தடுக்க முற்படும் பாதுகாப்புப் படைகளின் ‘ஒழுங்கு’ நடவடிக்கையும் நிறுத்தப்பட்டால் மட்டுமே அங்கு அமைதி ஏற்படும் என்பதை காஷ்மீரில் நிகழ்ந்துவரும் சம்பவங்களை நுணுக்கமாக அவதானித்துவரும் எவரும் ஒப்புக் கொள்வர்.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐந்தரை மணி நேரம் விவாதித்தப் பிறகும் நமது தலைவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு, கல்லெறியும் வன்முறையாளர்கள் கூறும் ஒரே காரணம்: காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தையும் மத்திய கூடுதல் காவற்படைகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே. இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை காஷ்மீரிகளிடையே பேட்டி கண்ட ஊடகங்கள் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தின.

“எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமில்லை. சாலைகளிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் காவற்படைகளும், இராணுவத்தினரும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அத்துமீறுகின்றனர், அவமானப்படுத்துகின்றனர். எங்களது பெண்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எங்களுக்குத் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இராணுவத்தாலும், மத்திய கூடுதல் காவற்படைகளாலும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

இவ்வாறு கூறுபவர்கள் காஷ்மீரிகள் மட்டுமல்ல, காஷ்மீரிலுள்ள மற்ற மாநிலத்தவரும், அயல் நாட்டவர்களும்தான். பாதுகாப்புப் படையினரால் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீநகரில் வாழுந்து வரும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரும் அவருடைய மனைவியும் கூறினர். இதையெல்லாம் இந்தியாவிலுள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவேதான் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து அவர்கள் கல் வீசி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒடுக்க முற்பட்ட காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும், தங்கள் சுதந்தரத்தை, அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கும் அந்தப் படைகள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதே காஷ்மீரிகளின் கோரிக்கை.

அதுமட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் (Armed Forces Special Powers Act - AFSPA). காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தபோது, அவர்களை ஒடுக்க, இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமளிக்க பிரகடனம் செய்யப்பட்ட இச்சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

தாங்கள் சந்தேகப்படும் எவரையும் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தவும், எந்த வீட்டிற்குள் நுழைந்தும் எந்த நேரமும் சோதனையிடவும், கைது செய்யவும், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் விசாரணையில் வைக்கவும் ஆயுதப் படைகளுக்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.

இச்சட்ட அதிகாரத்தை வைத்துக் கொண்டு இராணுவமும் காவற்படையும் எப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு உதாரணம்தான், சோபியானில் இரண்டு பெண்கள் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்ட (இந்த உண்மையை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மறைத்தது) சம்பவமாகும். இதைப்போல் பல நூறு சம்பவங்கள் காஷ்மீரில் நடந்துள்ளன. ஆனால் அவைகள் மறைக்கப்படுகின்றன அல்லது அரசால் மறுக்கப்படுகின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு நிரந்தரமான அடக்குமுறைக்கு ஒட்டுமொத்த காஷ்மீரும் உட்படுத்தப்பட்டுள்ளது எனும் உண்மையை இந்தியர்களாகிய நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசுகள் தங்கள் தவறுதலான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

பயங்கரவாதம், தீவிரவாதம், ஊடுறுவல் (பத்திரிக்கைகளில் வெளியான மாகில் படுகொலை) ஆகிய சொற்கள் எல்லாம் அரசுகளின் ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மறைக்கவும், தொடரவும் வசதியாக பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது.

எனவே, அவர்களின் இரண்டாவது கோரிக்கை, ஆயுத படைகள் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை பறித்து, அவர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தும் சட்டங்களுக்கு நிரந்தரமாக இடமளிப்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்?

சந்தேகத்தின் பெயரால் இராணுவத்தினரால் ‘அழைத்துச் செல்லப்பட்டு’ திரும்பிவராதவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள் என்று இந்தியா வந்த ஐ.நா.வின் மனிதாபி விவகாரங்களுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை கூறினார் அல்லவா? அவர்கள் கொடுத்த புகார்கள் விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினாரே. அதனை மறந்துவிடக் கூடாது.

பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுவச் செய்யப்படும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதில் எள்ளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் காஷ்மீரில் கண்ணில்படும் இளைஞர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற மனப்போக்கில் அரசப்படைகள் செயல்படுதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

இராணுவத்தினருக்கும், இதர ஆயுதப் படைகளுக்கும் எதிராக இப்போது காட்டப்படும் கல்வீச்சு எதிர்ப்பின் காரணத்தை மத்திய அரசு உணர்ந்தும், பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்றும் கூறுவது அம்மக்களை மேலும் அந்நியப்படுத்திவிடும்.

இப்போதே அவர்கள் மிக அதிகமான அந்நியப்பட்டுவிட்டார்கள். அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வந்த காரணத்தில் உருவான விளைவு இது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மட்டும் பேசினால் தவறாகும், அம்மக்களும் எம்மக்களே என்பதை தனது நடவடிக்கையின் மூலம் அரசு நிரூபிக்க வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டத் தேவையில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பிரதிநிதிகளாகவும், குரல்களாகவும் விளங்கும் தலைவர்களோடும், இயக்கங்களோடும் மத்திய அரசு பேச வேண்டும். இதைத்தான் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வென்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் தாரிகாமி கூறுகிறார்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உண்மையாக விரும்பினால், அது செய்ய வேண்டியது, அங்கு மக்கள் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய கூடுதல் காவற்படைகளை திரும்பப் பெற வேண்டும், எல்லையைத் தவிர மற்றப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், ஜனநாயக சூழலிற்கும், வாழ்விற்கும் எதிரான ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இதைச் செய்யாமல், ஒரு கோடி மக்கள் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 இலட்சம் இராணுவத்தினரையும், மேலும் 2 இலட்சம் ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண்போம் என்று பிரதமர் கூறுவாரேயானால், அது மற்ற இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.

ஏனெனில், காஷ்மீரைப் பொறுத்தவரை அமைதிக்கு எதிரி வன்முறை மட்டுமல்ல, ஆயுதப் படைகளும்தான் என்பதை பிரதமர் உணர்ந்து செயலாற்ற வேண்டும்

Saturday, August 14, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

நாம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் கொண்டாடும்போதேல்லாம் குறிப்பிட்ட பிரபலமடைந்த தலைவர்களின் புகழைப்பாடிக்கொண்டிருக்கின்றோம் .சாதாரணமாக நமக்கு தெரிந்த சுதந்திர போராட்ட வீரர்கள் என்றால் அதிகபட்சமாக ஒரு ஐம்பது தியாகிகளைப்பற்றி கூறமுடியும். ஆனால் சுதந்திரத்திற்காக எத்தனை ஆயிரம் மக்கள் தனது உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள் . அவர்களின் பெயர்கள் கூட நமக்கு தெரியாதே . தனது பெயரைக்கூட சுதந்திரத்திற்க்காக தியாகம் செய்த தியாகிளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வோம் . அந்த அடிப்படையில் இன்று திரு .பி. கக்கன் அவர்களிப்பற்றி சில தகவல்கள் ...

இளமைக்காலம்


கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.

இந்திய விடுதலை போராட்டம்


கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி

கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்.1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .

நற்பணிகள்

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

அரசு மருத்துவமனையில் இடமில்லாமல்....

மேனாள் தமிழக முதல்வர் ம.கோ.இரா அவர்கள் தனக்குத் தெரிந்த ஒருவரைப் பார்க்கும் பொருட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கே தற்செயலாக படுக்க படுக்கை கூட இன்றி தரையிலே படுத்துக் கிடந்த ஒரு நோயரைக் கண்டதும் அவரருகில் சென்று அவர்நிலை கண்டு வருந்தினார். அந் நோயர் வேறு யாருமல்ல. ‌தியாகி கக்கனே!

தியாகி கக்கனைப்பற்றிய தகவல்களோடு இனிய சுதந்திர தின வாழ்த்துக்களையும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் .



Monday, July 26, 2010

நோக்கியாவின் அட்டூழியமும் அதை அம்பலப்படுத்திய வினவும்

வினவு குறிப்பு:

சென்னை
நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.

அதிர்ச்சியில் உறைந்து போனோம்!

மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.

கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.

நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.

நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!

‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.

இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !

ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.

என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.

இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.

விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?

மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”

இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.

ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.

மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!

எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.

இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.

சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.

காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.

அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.

இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.

காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.

தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.

இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள். தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.

வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.

ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு போபால்?

இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.

விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?

தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!

அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?

இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.

உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.

சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.

இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.

நோக்கியாவின் காலன் ட்யூன்!

நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.

கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.

நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.

காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

குறிப்பு : இக்கட்டுரையை மறு பதிவிட அனுமதி அளித்த வினவு .காம் -க்கு நன்றி.