கடந்த 24 ஆண்டுகளாக ரன் குவிக்கும் எந்திரமாக இயங்கி வந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்துள்ள சச்சினை, டெஸ்ட் போட்டியில் மட்டும் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. சச்சினின் 200-வது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து, ஆடுகளத்தில் தனக்கே உரித்தான பாணியில் விளையாடும் சச்சினை ரசிகர்கள் காண முடியாது.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சச்சின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15, 837 ரன்களைக் குவித்துள்ள சச்சின், "கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதற்கு கடினமாக உள்ளது' என்று மனம் உருகித் தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு அறிவிப்புக்குப் பின் அவர் கூறியது:
என்னுடைய வாழ்க்கை முழுவதும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றே கனவு கொண்டிருந்தேன். கடந்த 24 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் அதே கனவுகளுடன் வாழ்ந்து வந்தேன். எனது 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட் விளையாடாத வாழ்வை நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.
எனது தாய் நாட்டின் சார்பில் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடியதை பெரும் கெüரவமாகப் பார்க்கிறேன். சொந்த மண்ணில் விளையாட உள்ள 200-வது டெஸ்ட் போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
எனது மனசாட்சி அனுமதிக்கும் வரை, என்னை கிரிக்கெட் விளையாட அனுமதித்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னை புரிந்து கொண்டு, பொறுமையுடன் காத்திருந்த எனது குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைத்தையும்விட, நான் நன்றாக விளையாட வேண்டும் என்று பிரார்த்தனை நடத்திய ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
சதங்கள் அதிகரிக்குமா? டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சச்சின் இதுவரை 100 சதங்களை அடித்துள்ளார். கடைசியாக விளையாட உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் பேராவல் கொண்டுள்ளனர்.
சொந்த மண்ணில் சாதனை: 198 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள சச்சின், மேலும் 2 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் 200 டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்ய உள்ளார். இந்த சாதனை, தென் ஆப்பிரிக்க தொடரில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் டெஸ்ட் மட்டும் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால், 200 டெஸ்ட் போட்டியை தனது தாய் நாட்டிலே விளையாடும் வாய்ப்பை சச்சின் பெற்றார்.
எங்கே 200-வது டெஸ்ட்?: 200-வது டெஸ்ட் போட்டியை சச்சினின் தனது சொந்த மாநிலத்திலேயே விளையாட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல, தங்கள் மாநிலத்தில் விளையாட வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடும் டெஸ்ட் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், தற்போது சச்சின் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால், அவரைக் கெüரவப்படுத்தும் வகையில், மகாராஷ்டிரத்திலேயே அவரது 200-வது டெஸ்ட் போட்டி வரும் வகையில் பிசிசிஐ அட்டவணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறே போட்டி அட்டவணை வெளியிடப்பட்டால், அவரது இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 14-ம் தேதி நடைபெறும்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்கள்
வீரர் போட்டிகள் இன்னிங்ஸ் சதங்கள் அதிகபட்சம்
சச்சின் (இந்தியா) 662 780 100 248*
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 560 668 71 257*
காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) 508 604 61 224
லாரா (மேற்கிந்தியத் தீவுகள்) 430 521 53 400*
சங்ககாரா (இலங்கை) 516 574 49 287
திராவிட் (இந்தியா) 509 605 48 270
ஜெயவர்த்தனே (இலங்கை) 590 658 48 374
ஜெயசூர்யா (இலங்கை) 586 651 42 340
ஹைடன் (ஆஸ்திரேலியா) 273 348 40 380
டெஸ்ட்: பேட்டிங்
அறிமுகம்: 1989-பாகிஸ்தான்
போட்டிகள் : 198
இன்னிங்ஸ் : 327
நாட் அவுட் : 33
ரன்கள் : 15,837
அதிகபட்சம் : 248*
சராசரி : 53.86
சதம் : 51
அரை சதம் : 67
பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 142
விக்கெட்டுகள் : 45
சிறந்த பந்து வீச்சு : 3வி/10
ஒருநாள்: பேட்டிங்
அறிமுகம்:1989-பாகிஸ்தான்
கடைசி:2012-பாகிஸ்தான்
போட்டிகள் : 463
இன்னிங்ஸ் : 452
நாட் அவுட் : 41
ரன்கள் : 18,426
அதிகபட்சம் : 200*
சராசரி : 44.83
சதம் : 49
அரை சதம் : 96
பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 270
விக்கெட்டுகள் : 154
சிறந்த பந்து வீச்சு : 5வி/32
இருபது ஓவர் பேட்டிங்
போட்டி : 1
இன்னிங்ஸ் : 1
ரன் : 10
அதிகபட்சம் : 10
சராசரி : 10.00
பந்து வீச்சு
இன்னிங்ஸ் : 1
விக்கெட் : 1
சிறந்த பந்து வீச்சு : 1வி/12
ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த சதங்கள்
அணிகள் டெஸ்ட் ஒருநாள்
ஆஸ்திரேலியா 11 9
இலங்கை 9 8
தென் ஆப்பிரிக்கா 7 5
நியூஸிலாந்து 4 5
இங்கிலாந்து 7 2
ஜிம்பாப்வே 3 5
பாகிஸ்தான் 2 5
மேற்கிந்தியத் தீவுகள் 3 4
வங்கதேசம் 5 1
கென்யா - 4
நமீபியா - 1
No comments:
Post a Comment