Friday, September 17, 2010

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த.......

காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம், மத்திய கூடுதல் காவற்படை, மாநில காவல் படை ஆகியவற்றை எதிர்த்து அம்மாநில மக்கள், குறிப்பாக மாணவர்களும் இளைஞர்களும் கல்லெறிந்து நடத்திவரும் வன்முறையும், அதனை துப்பாக்கிச் சூடு நடத்தி தடுக்க முற்படும் பாதுகாப்புப் படைகளின் ‘ஒழுங்கு’ நடவடிக்கையும் நிறுத்தப்பட்டால் மட்டுமே அங்கு அமைதி ஏற்படும் என்பதை காஷ்மீரில் நிகழ்ந்துவரும் சம்பவங்களை நுணுக்கமாக அவதானித்துவரும் எவரும் ஒப்புக் கொள்வர்.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்து முடிந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஐந்தரை மணி நேரம் விவாதித்தப் பிறகும் நமது தலைவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து, அனைத்து மாவட்டங்களிலும் நிகழும் அல்லது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு, கல்லெறியும் வன்முறையாளர்கள் கூறும் ஒரே காரணம்: காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தையும் மத்திய கூடுதல் காவற்படைகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே. இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை காஷ்மீரிகளிடையே பேட்டி கண்ட ஊடகங்கள் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தின.

“எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமில்லை. சாலைகளிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் காவற்படைகளும், இராணுவத்தினரும் சோதனை என்ற பெயரில் எங்களிடம் அத்துமீறுகின்றனர், அவமானப்படுத்துகின்றனர். எங்களது பெண்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். எங்களுக்குத் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இராணுவத்தாலும், மத்திய கூடுதல் காவற்படைகளாலும் காஷ்மீர் சிறைபடுத்தப்பட்டுள்ளத” என்று கூறுகின்றனர்.

இவ்வாறு கூறுபவர்கள் காஷ்மீரிகள் மட்டுமல்ல, காஷ்மீரிலுள்ள மற்ற மாநிலத்தவரும், அயல் நாட்டவர்களும்தான். பாதுகாப்புப் படையினரால் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக ஸ்ரீநகரில் வாழுந்து வரும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரும் அவருடைய மனைவியும் கூறினர். இதையெல்லாம் இந்தியாவிலுள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவேதான் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து அவர்கள் கல் வீசி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்களை ஒடுக்க முற்பட்ட காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும், தங்கள் சுதந்தரத்தை, அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கும் அந்தப் படைகள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதே காஷ்மீரிகளின் கோரிக்கை.

அதுமட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் (Armed Forces Special Powers Act - AFSPA). காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருந்தபோது, அவர்களை ஒடுக்க, இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமளிக்க பிரகடனம் செய்யப்பட்ட இச்சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

தாங்கள் சந்தேகப்படும் எவரையும் கைது செய்து அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தவும், எந்த வீட்டிற்குள் நுழைந்தும் எந்த நேரமும் சோதனையிடவும், கைது செய்யவும், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் விசாரணையில் வைக்கவும் ஆயுதப் படைகளுக்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.

இச்சட்ட அதிகாரத்தை வைத்துக் கொண்டு இராணுவமும் காவற்படையும் எப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு உதாரணம்தான், சோபியானில் இரண்டு பெண்கள் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்ட (இந்த உண்மையை தனது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசு மறைத்தது) சம்பவமாகும். இதைப்போல் பல நூறு சம்பவங்கள் காஷ்மீரில் நடந்துள்ளன. ஆனால் அவைகள் மறைக்கப்படுகின்றன அல்லது அரசால் மறுக்கப்படுகின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு நிரந்தரமான அடக்குமுறைக்கு ஒட்டுமொத்த காஷ்மீரும் உட்படுத்தப்பட்டுள்ளது எனும் உண்மையை இந்தியர்களாகிய நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனெனில் அரசுகள் தங்கள் தவறுதலான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

பயங்கரவாதம், தீவிரவாதம், ஊடுறுவல் (பத்திரிக்கைகளில் வெளியான மாகில் படுகொலை) ஆகிய சொற்கள் எல்லாம் அரசுகளின் ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மறைக்கவும், தொடரவும் வசதியாக பயன்படுத்தப்படுகின்றன. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது.

எனவே, அவர்களின் இரண்டாவது கோரிக்கை, ஆயுத படைகள் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை பறித்து, அவர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தும் சட்டங்களுக்கு நிரந்தரமாக இடமளிப்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்?

சந்தேகத்தின் பெயரால் இராணுவத்தினரால் ‘அழைத்துச் செல்லப்பட்ட’ திரும்பிவராதவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள் என்று இந்தியா வந்த ஐ.நா.வின் மனிதாபி விவகாரங்களுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை கூறினார் அல்லவா? அவர்கள் கொடுத்த புகார்கள் விசாரிக்கப்படவில்லை என்றும் கூறினாரே. அதனை மறந்துவிடக் கூடாது.

பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுவச் செய்யப்படும் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதில் எள்ளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் காஷ்மீரில் கண்ணில்படும் இளைஞர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற மனப்போக்கில் அரசப்படைகள் செயல்படுதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று.

இராணுவத்தினருக்கும், இதர ஆயுதப் படைகளுக்கும் எதிராக இப்போது காட்டப்படும் கல்வீச்சு எதிர்ப்பின் காரணத்தை மத்திய அரசு உணர்ந்தும், பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு என்றும் கூறுவது அம்மக்களை மேலும் அந்நியப்படுத்திவிடும்.

இப்போதே அவர்கள் மிக அதிகமான அந்நியப்பட்டுவிட்டார்கள். அவர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து புறந்தள்ளப்பட்டு வந்த காரணத்தில் உருவான விளைவு இது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மட்டும் பேசினால் தவறாகும், அம்மக்களும் எம்மக்களே என்பதை தனது நடவடிக்கையின் மூலம் அரசு நிரூபிக்க வேண்டும். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டத் தேவையில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் பிரதிநிதிகளாகவும், குரல்களாகவும் விளங்கும் தலைவர்களோடும், இயக்கங்களோடும் மத்திய அரசு பேச வேண்டும். இதைத்தான் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வென்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் தாரிகாமி கூறுகிறார்.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உண்மையாக விரும்பினால், அது செய்ய வேண்டியது, அங்கு மக்கள் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய கூடுதல் காவற்படைகளை திரும்பப் பெற வேண்டும், எல்லையைத் தவிர மற்றப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், ஜனநாயக சூழலிற்கும், வாழ்விற்கும் எதிரான ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இதைச் செய்யாமல், ஒரு கோடி மக்கள் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 இலட்சம் இராணுவத்தினரையும், மேலும் 2 இலட்சம் ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண்போம் என்று பிரதமர் கூறுவாரேயானால், அது மற்ற இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.

ஏனெனில், காஷ்மீரைப் பொறுத்தவரை அமைதிக்கு எதிரி வன்முறை மட்டுமல்ல, ஆயுதப் படைகளும்தான் என்பதை பிரதமர் உணர்ந்து செயலாற்ற வேண்டும்

No comments:

Post a Comment