உனக்கு நான் ! எனக்கு நீ !! இச்சமுதாயத்திற்கு நாம் !! தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் ! உயர்வோம் !!
Wednesday, December 30, 2009
புத்தாண்டே வருக !
வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
- அன்புடன்....
சி . ராஜபாண்டியன்....
Sunday, December 27, 2009
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சிறு குழந்தையின் சிரிப்பு ஒலியில்உலகம் அதிர..
இளைஞர்கள் கனவுகள் நிறைவேற
ஏழை எளியவர்களின் வறுமை ஓழிய
உலகில் அமைதி நிகழ்ந்து
இயற்கையின் கோபம் தணிந்து
பூக்கள் மலர
இனிய புத்தாண்டு தொடங்கட்டும்......
Saturday, December 26, 2009
Thursday, December 17, 2009
“பேராண்மை”

கத்திரிக்காய் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இந்நேரத்தில் இயற்கை வேளாண்மையின் மேன்மையையும், அவசியத்தையும் வலியுறுத்தி வசனங்கள் வருவதற்காகவே இம்மண்ணை நேசிக்கும் அனைவரின் சார்பாக நாம் பேராண்மை திரைப்படத்துக்கும் அதன் இயக்குநர் ஜனநாதனுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு என்பது, இம்மண்ணின் மைந்தர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை. அதை இன்னும் முறைப்படுத்தி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரிவரக் கிடைக்குமாறு செய்வது நல்ல அரசாங்கத்தின் கடமை.
இட ஒதுக்கீடு என்பதே இன்னும் முழுமையாக மக்களுக்கு போய்ச் சேராத நிலையில், இடஒதுக்கீடால் பயனடைந்த சிலரின் சிறுவளர்ச்சியைக்கூட இந்துத்துவ மனோபாவம் எவ்வளவு காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கிறது என்பதை “பேராண்மை” படத்தில் இயக்குனர் தன்னால் இயன்ற அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளார். பழங்குடி மக்களுக்கான அரசியலை அந்த மக்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபட வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஜனநாதனைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.
பழங்குடி மக்களிடமிருந்து ஒருவன் படித்து மேல்நிலைக்கு வருவதை, சராசரி “இந்துத்துவ மனநிலை” ஏற்க மறுப்பதும் அதைக் கதாநாயகன் எதிர்கொள்வதும்தான் கதையின் முக்கிய அம்சம். சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் விளிம்பு நிலையிலிருக்கும் கதாநாயகன், இம்மண்ணின் விவசாய நிலம் மலடாக்கப்படுதல், அந்நிய ஆக்கிரமிப்பு, அரசியல், பொருளாதாரச் சீர்த்திருத்தம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்கும் காட்சிகள், சினிமா இரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் புதிதுதான். ஏழைகளுக்காகவும், சேரி மக்களுக்காகவும் பாடுபடுவது போல எம்.ஜி.ஆர். அதிக படங்களில் நடித்துள்ளார். ஆனால் அத்திரைப்படங்களில் அவர் ஒரு பணக்காரராகவும், உயர்சாதியினராகவும் இருந்து, அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடும் கடவுளாக காட்டப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் அரசியலை எசமான விசுவாசத்தோடு இருக்க வைத்ததற்கு இத்தகையத் திரைப்படப் போக்குகள் பெரிதும் உதவின. ஆனால் உண்மையான ஒடுக்கப்பட்டோர் அரசியலை ஒடுக்கப்பட்டோரின் தலைமையில்தான் நடத்த வேண்டும் என்கிற சரியான பார்வையைத் திரையுலகில் முதலில் கொண்டுவந்தவர் என்கிற பெருமை இயக்குநர் ஜனநாதனையே சாரும்.
பெண்களை ஆயுதம் பயன்படுத்தத் தெரிந்தவர்களாகவும், அதீதத் துணிச்சல்காரர்களாகவும், ஆணுக்கு எந்த ஒரு புள்ளியிலும் சளைக்காதவர்களாகவும் சர்வசாதரணமாகத் திரையில் கையாண்டிருப்பது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று. போர்க்காட்சியில் கதாநாயகன் ‘நான் இறந்துட்டா நீங்க போரை நடத்திப் பொதுவுடமை சமூகத்தை நிலைநாட்டுங்கள்’ என்று சொல்லும் காட்சியில் சமூக மாற்றத்துக்கான அனைத்துச் செய்திகளையும் இந்த ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்கிற இயக்குநரின் ஆசையையும், தவிப்பையும் உணர்கிறோம்.
மனிதர்களின் சாதியையும், மதத்தையும் சுட்டிக் காட்டியே வாழ்பவர்கள் எவ்வளவு குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் என்பதைக் கதாநாயகனுக்கு மேலதிகாரியாக வரும் கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஒடுக்கப்பட்டோர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டினால்தான் தனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை என்று அறிவிற்குப் புறம்பாக புலம்பிக் கொண்டே காலம் தள்ளும் ஒடுக்குஞ் சாதியினருக்கு சரியான பாடத்தை அந்த கணபதிராம் கதாபாத்திரத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
கதாநாயகனிடம் பாடம் கற்கும் மாணவிகளில் எல்லோரும் அவனது பிறப்பை வைத்து அவனை வெறுத்து ஒதுக்க, ஒரே ஒரு இசுலாமியப் பெண் மட்டும் அவனது அறிவையும், ஆற்றலையும் கண்டு வியந்து அவனை விரும்புவது போல் காட்சியமைத்திருப்பது, சிறுபான்மைச் சமூகம், இந்துத்துவ மனநிலையிலிருந்து சற்று விலகியிருப்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம். கதாநாயகன் மாணவிகளிடம் ‘நான் ஆங்கிலம் பேசினா என் மக்களுக்குப் புரியாது, உங்களுக்குப் பிடிக்காது’ என்று சொல்லும் காட்சியில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆதிக்க மனநிலைக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
“கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்ற அம்பேத்கர் அவர்களின் கொள்கை முழக்கங்களை அச்சிட்டே இப்படத்தின் தொடக்க விழா நடந்தது. ஆனால் மனுதர்மத்தைப் பற்றிய அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைக் கூட என்னால் இப்படத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்று ஜனநாதன் அவர்கள் தொலைக்காட்சியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனநாதன் அவர்களே! சட்டக் கல்வி படிக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களே இந்திய அரசியலமைப்பின் தந்தை சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் படமோ, பெயரோ கல்லூரியில் இருக்கக் கூடாது என்ற இந்துத்துவத் தீண்டாமை மன நிலையில் இருக்கும்போது, அந்த இந்துத்துவ மனநிலையை வளர்த்தெடுக்க உதவும் இந்த இந்தியத் தேசிய அரசாங்கம், எப்படி அம்பேத்கரின் மனுதர்ம விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் ?.
மார்க்சையும், ஒடுக்கப்பட்டோர் அரசியலையும் படித்து வளரும் கதாநாயகன், தனது மேலதிகாரியின் வக்கிரமான பேச்சுக்கும், கேவலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் அடங்கிப்போவது போல் படம் முழுக்கக் காண்பித்திருப்பது நமக்கு நெருடலாக உள்ளது. அடங்கிப் போகவா மார்க்சும், பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள்? மார்க்சிய சிந்தனை கொண்ட கதாநாயகனிடமிருந்து சின்ன பதிலடி கூட இல்லாமல் காட்சிகள் இருப்பது ஒரு குறைதான்.
இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான வசனங்கள், மனுதர்ம விமர்சனம் போன்ற அனைத்தும் தணிக்கைக் குழுவினரால் வெட்டியெறியப்பட்டு விட்டது என்பது வேதனைக்குரிய செய்தி. தமிழ்நாட்டிற்கென்று தமிழ்த் திரைக்கென்று தனியாகத், தணிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். தமிழ்க் கலைஞர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழரல்லாதவர்களின் கையில் இருக்கக் கூடாது.
தணிக்கைக் குழுவினர் சில வசனங்களை வெட்டியெறிந்ததைப் போலவே, தணிக்கை குழு அனுமதித்த சில வசனங்களை நாம் வெட்டியெறிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆபாச இரட்டைப் பொருள் வசனங்களை மட்டும் நாம் சொல்லவில்லை. இதோ:
“இந்திய தேசத்தைக் காப்பேன்!
என் உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தைக் காப்பேன் !!”
ஆண்டாண்டு காலமாக, இந்த “இந்தியத் தேசம்” நம் மக்களின் உயிரை வாங்கிக் கொண்டிருப்பது போதாது என்று நாம் வேறு விரும்பி உயிரைக் கொடுக்க வேண்டுமாம்! (ஜனநாதன் அவர்களின் இக்கட்டான சூழ்நிலை நமக்குப் புரிகிறது). இந்த வசனங்களை மட்டும் நாம் தணிக்கை செய்து விட்டுப் பார்த்தால் “பேராண்மை” பேசப்பட வேண்டிய பேருண்மை.
(சமுக நீதித் தமிழ்த் தேசம் நவம்பர் 2009 இதழில் வெளிவந்த விமர்சனம்)
Saturday, December 12, 2009
கண்ணீர் அஞ்சலி !
Thursday, December 3, 2009
பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; மொபைலில் பேசியபடியே வந்த வேன் டிரைவர் !










நாகப்பட்டினம்: தமிழகத்தில் ஒரே நாளில் பள்ளிக்குழந்தைகள் சென்ற 2 வேன்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஆசிரியைகள் உள்பட பள்ளிக்குழந்தைகள் 10 பேர் இறந்தனர். 40 பேர் காயமுற்றனர். கவலைக்கிடமான நிலையில் சில குழந்தைகள் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்ததால் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கலைவாணி மெகா மெட்ரிக்., மழலை பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் கத்திரிபுலம் என்ற பகுதியில் சென்ற வேன் , எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
ஆசிரியையும் பலி: இதில் ஆசிரியை குழந்தைகள் உள்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் பலரை உயிருக்கு போராடிய நிலையில் மீட்டுள்ளனர். இந்த வேனில் ஆசிரியைகள் உள்பட 25 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. பல குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மொபைல் பேசி வந்த வேன் டிரைவர் : இந்த வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போன் பேசிக்கொண்டே வந்தார் என வேனில் இருந்த மாணவர்கள் கூறினர். மொபைலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வளைவு வந்தது இதனையடுத்து வேனை திருப்பும்போது இந்த வேன் தடுமாறியது. இதில் கூடுதல் தகவல் என்னவெனில் வேன் மிக பழையதாக இருந்தது. உரிய கண்டிஷனும் இல்லை என அங்கிருந்து நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். டிரைவரும், கிளீனரும் வேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனை செய்ய பெற்றோர்கள் எதிர்ப்பு : இறந்த குழந்தைகளின் உடல் மருத்துவ பரிசோதனை ( போஸ்ட் மார்டம் ) செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துதான் கொடுப்போம் என மருத்துவர்களும், போலீசாரும் தெரிவித்து விட்டனர்.
நிவாரணம் அறிவிப்பு : இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும், ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆத்தூரில் மற்றொரு விபத்து: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்ற பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். ஆத்தூர் அருகே சரஸ்வதி மெட்ரிக்., பள்ளியை சேர்ந்த வேன் வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இதில் 18 பேர் தான் பயணிக்க முடியும். ஆனால் 30 பேரை ஏற்றி சென்றுள்ளனர். நரிக்குறவன் காலனி அருகே நிலைதடுமாறிய வேன் தென்னை மரத்தின் மீது மோதியது. இதில் 30 குழந்தைகள் காயமுற்றனர். டிரைவர் உள்பட 5 பேர் நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமுற்றவர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கதறி அழுதபடி நிற்கின்றனர்.
விபத்தில் இறந்தவர்கள் விவரம் : விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் தெரிய வந்துள்ளது. கார்த்திகேயன் மகன்கள் ; ஜெயப்பிரகாஷ் ( 1 ம் வகுப்பு ) , ஜெயசூர்யா ( யு.கே.ஜி.,), அஜய் ( யு.கே.ஜி.,), விஜிலா ( யு.கே.ஜி.,), ஹரிகரன் ( எல்.கே.ஜி.,), ஈஸ்வரி ( 2 ம் வகுப்பு ), அபிநயா , மகாலட்சுமி . ஆசிரியை பெயர் சுகந்தி இவர் கட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர்.
மாவட்ட கலெக்டர் ஆறுதல் : சம்பவம் நடந்த இடத்திற்கு கலெக்டர் முனியநாதன், மாவட்ட எஸ். பி., மகேஸ்வரன், வேதாரண்யம் எம்.எல்.ஏ., வேதரத்தினம் மற்றும் அதிகாரிகள் சென்றனர். விபத்து நடந்தது குறித்து விசாரித்தனர். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.
தமிழகத்தில் மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏதும் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு நிர்வாகம் உஷாராக இருந்த நேரத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள் சிக்கியது.
- தினமலர் (03.12.2009)
Tuesday, December 1, 2009
உயிர்
Friday, November 27, 2009
சேகுவேரா

இளமைக்காலம்சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.
Thursday, November 26, 2009
காசிஆனந்தன் கதைகள்
சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன. மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.குஞ்சுகள் கவனிக்கவில்லை. பாம்புக்கு இது வாய்ப்பானது.குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்நுழைந்தது.நொடிப்பொழுதில்-பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின். அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.அது மீண்டும் இரைந்து கத்தியது.
“சிறகு விரி
பிறகு சிரி”
உயர்வு
காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....' என்று தன் பெருமையை பறைசாற்றியது.பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.கொஞ்ச நேரத்தில்ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..
"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்.!! !"
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். லியோ
டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. அப்ரஹாம் லிங்கன்:கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
ஐன்ஸ்டின்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.அப்ரஹாம் லிங்கன்
மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.- அக்னஸ் றெப்லையர்
புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.- பிலிப் குறொஸ்பி
மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.- பேர்ள் எஸ். பக்
புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.- மார்கஸ் அரேலியஸ்
எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.- எமர்சன்
உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.- எலனொர் றூஸ்வெல்ற்
எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?நான் என்ன செய்ய வேண்டும்?இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.- நதானியல் பிராண்டன்
கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம்என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- நெப்போலியன் ஹில்
Wednesday, November 25, 2009
Sunday, November 22, 2009
உன் உள்ளங்கையிலும் உலகம் சுழலும்
இளைஞனே!
வாழ்க்கை
ஒரு புன்னகைத்
திருவிழா!
அதில் நீ ஏன்
கண்ணீர் கவிதை
வாசிக்கிறாய்?
விழிகளில்
வழியும்
வியர்வையை
துடை
புன்னகை
உடுத்து
கவலை இருளில்
கரையும்
உனக்கோர்
கவிதை
தீக்குச்சி
கிழிக்கிறேன்
வா!
மூலையில்
சேமித்த உன்
மூளையை
செலவாக்கு
விஞ்ஞானிபோல்
புத்தி செதுக்கு
மெய்ஞானிபோல்
ஆன்மா துலக்கு
அன்பு ஒன்றுதான்
வாழ்வின் இலக்கு
எதிர்வரும்
தடைகளை
விலக்கு
இனி வெளுக்கும்
உன் கிழக்கு
தோல்வி துளைகளில்
தான் வெற்றிப்
புல்லாங்குழல்
வாசிக்க முடியும்
எனவே தோல்வி கண்டு துவண்டு விடாதே!
விழுவதெல்லாம்
எழுவதற்குத்தான்
நீ புண்படுவதெல்லாம்
பண்படுவதற்குத்தான்.
குப்பை கிளறித்
திரிய கோழி
அல்ல நீ
குன்றின் மேல்
கூடுகட்டும் ராஜாளி!
வாழ்வைப் பிழிந்து
அனுபவம் அருந்து
உழைப்பு ஒன்றுதான்
உன் கண்ணீருக்கு
மருந்து!
தேன்துளி
அல்ல நீ
தித்திப்போடு
முடிந்திட
தீத்துளி!
மழைத்துளி
அல்ல நீ
மண்ணில்
வீழ்ந்ததும்
மறைந்திட
மனிதத் துளி!
நின்றுகேள்
ஒன்று சொல்வேன்
நீ எந்த
சிகரத்தின்
உச்சி தொட்டாலும்
சரி
மனித நேசம்
மறந்துவிடாதே
அச்சம் தவிர்
அறியாமை அகற்று
நம்பிக்கை கொள்
உன் உள்ளங்கைக்குள்
உலகம் சுழலும்.
Saturday, November 21, 2009
Wednesday, November 18, 2009
Tuesday, November 17, 2009

ஆனால்,
அவர் பின்னாடி யாரயோ அழைப்பது போல் தொன்றியாது. அவர் அழைத்தது அவரது கனவர். 70 வயதிருக்கும் அவர் உடல்நிலை சரியில்லாதவர் போலும். மிகுந்த அயர்ச்சியாக காணப்பட்டார்.
அவர் மிகவும் சிரமப்பட்டு பின்னாலிருந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தார். பிறகு அந்த பாட்டி நின்று கொண்டே பயணித்தார்.
நான் பார்த்து இதைத்தான் என்றாலும்,
எத்தனை ஆழமான காதல் இருவருக்கும்.அந்த பாட்டி நினைத்திருந்தால் தாராளமாக அந்த இருக்கையில் அமர்ந்திருக்கலாம்.
ஆனால் இது எப்படி...?
அப்போது தோன்றியது எனக்கு,
இதுதான் காதலோ என்று...
Monday, November 16, 2009
வந்தே மாதரம் – தமிழாக்கம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருஅபெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! அப்பா என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்
வந்தே மாதரம் – பாரதியார்
பல்லவி
வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
Sunday, November 15, 2009
மனத்திதையில் பிரதிபலிக்கும் வண்ணங்களின் தன்மைகளைக் கொண்டு ஒருவரது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியுமாம்!
அதற்கு முன், வண்ணங்கள் என்ன எண்ணங்களைக் குறிக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.......இதோ வண்ணங்களின் தன்மைகள்:
1.சிவப்பு: தெளிவாக சிவப்பு ஒளி பிரகாசித்தால் நல்ல ஆரோக்கியத்தையும் அதிகமான ஆழமான பாலுணர்வையும் குறிக்கும். மங்கலான சிவப்பு வண்ணம் கோபம்-வெறுப்பு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் - வஞ்சத் தன்மைகளைக் குறிக்கும்.
2.ஆரஞ்சு: தெளிவாகவும் பிரகாசமாகவும் ஆரஞ்சு வண்ணம் தெரிந்தால் இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாகவும் மனவுறுதி படைத்தவர்களாகவும் இருப்பார்கள். மதிப்பு- மரியாதை ஆகிய பண்புகள் இவர்களிடம் இருக்கும். மங்கலான ஆரஞ்சு வண்ணம் - நம்பகமில்லாத தன்மைகளையும் மதிக்காத குணம் - தூக்கியெறிந்து பேசும் தன்மை மற்றும் அதிக விபரம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
3.மஞ்சள்: பிரகாசமான மஞ்சள் வண்ணம் நல்ல உடல்வாகு - கவர்ச்சி - மதிப்பு - மரியாதை ஆகிய குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றும் பலரையும் உபசரித்து மகிழ்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். மங்கலான மஞ்சள் ஒளியுள்ளவர்கள் நம்ப முடியாது.நயவஞ்சகத் தன்மை உள்ளவர்கள். இவர்கள் செயல்களும் பதட்டம் அவசரத் தன்மை இருக்கும்.
4.பச்சை: நல்ல தெளிவான பச்சை வண்ணம் பிரகாசமாக இருந்தால் அது நேர்மை , நியாயம், அன்பு, பாசம் ஆகியவைகளைக் குறிக்கும். இவர்கள் உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். நமது வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவி செய்வார்கள். மங்கலான பச்சை வண்ணம் - போட்டி, பொறாமைக் குணங்களைக் குறிக்கும்.
5.நீலம்:நல்ல பிரகாசமான நீல வண்ணம் உங்களுக்கு அமைதியையும் அன்பையும் தரக்கூடியது. கிரியாசக்திகள் நன்கு செயல்படுவதை இந்த பிரகாசமான நீல ஒளி குறிப்பிடுகிறது. இவர்கள் நல்லதையே செய்வார்கள். பிறருக்கு உதவி செய்வார்கள். மங்கலான நீல ஒளி சாதாரணமானவர்களாகத்தான் இருப்பார்கள்.
6.இண்டிகோ - கருநீலம்: இந்த வண்ணம் சூட்சும சக்திகளின் ஆற்றல்களை வெளிக்காட்டுகிறது. தெளிவான கருநீலம் உள்ளவர்கள் சூட்சும சக்திகளை இயக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். உன்னத யோக நிலையை அடைந்தவர்கள். இவர்கள் ஞானிகள் யோக சித்திகள் அடைந்தவர்களாகவே அமைதியுடனும் ஆனந்தத்துடனும் அன்பு ஒளியை பரவச் செய்து கொண்டும் இருப்பார்கள்.
7.வயலட் - ஊதா: நல்ல தெளிவான ஒளி பிரகாசத்துடன் வயலட் வண்ணம் ( ஊதா / கத்தரிப்பூ) தெளிவாக இருப்பதால் இவர்கள் மகான்கள்தான். எல்லாம் அறிந்தவர்களாக இருப்பார்கள். வயலட் - தங்க வண்ணம் - பச்சை போன்ற வண்ணங்களையும் பிரகாசிப்பவர்கள். மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆன்மீக குருமார்களாகவும் ஆற்றல் மிகுந்து திகழ்வார்கள்.
AIEEE நுழைவுத்தேர்வு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
அதாவது ஒரு பிறவியில் நாம் கற்கும் கல்வி எழு பிறவிக்கும் பயன் தரும் என்பது வள்ளுவன் வாக்கு. கல்வி என்பது தற்பொழுது தொழிற்கல்வி குறிக்கும்.
“தொழிற்கல்வி தான்கற்கும் முன்பு ஒருவற்கு நுழைவுத்தேர்வு வெழுதல் கடனே” என்றவாறு புதுக்குறள் எழுதலாம். அதாவது தொழிற்கல்விற்கு ஒருவர் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதாகும்.
தனிச்சிறப்பு மிக்க NIT (National institute of Technology) போன்ற கல்லூரிகளில் பயில மாணவ மாணவிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
IITக்கு அடுத்தபடியாக உள்ள NIT அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள 32 வகையான பொறியல் துறைகள மற்றும் 4 வகையான கட்டிடக்கலை படிப்பில் படிக்க வேண்டுமெனில் அதற்கென தனிப்பட்ட நுழைவுத் தேர்வான AIEEE தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வானது அகில இந்திய அளவில் பொறியியல் படிப்பில் சேரத் தேவையானதாகும்.
B.E/B.Tech நுழைவுத் தேர்விற்கு குறைந்த பட்சம் பிளஸ்டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் B.Arch நுழைவுத் தேர்விற்கு 10வது மற்றும் 12வது வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தேர்வை எழுத பிளஸ்டூவில் கணிதமும், இயற்பியலும் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இது தவிர வேதியல்/ கம்யூட்டர் சயின்ஸ்/ பயாலஜி/ பயோடெக்னாலஜி இவற்றில் ஒன்றையும் படித்திருக்க வேண்டும். 1985ம் ஆண்டு அக்டோபர் 1 தேதிக்கு பின்பாக பிறந்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஊனமுற்றோர் பிரிவினர்க்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு தரப்படும். இந்த நுழைவுத்தேர்வை தொடர்ச்சியாக 3 முறை மட்டுமே எழுத முடியும்.
B.E/B.Tech பொறியியல் மாணவர்களுக்கு 3 மணி நேரம் தனித்தேர்வாக வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி (25.04.2010) அன்று ஒன்பதாவது முறையாக நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கின்றது. B.Arch. கட்டிடக்கலை மாணவர் களுக்கு 3 மணிநேரம் தனிததேர்வாக 25. 04. 2010 அன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சுமாராக 10 லட்சம் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத இருக்கின்றனர்.
முதன் முறையாக AIEEE நுழைவுத்தேர்வு மே 19, 2002 அன்று நாட்டின் 65 நகரங்களில் 396 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சுமார் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் 102 பொறியியல் கல்லூரிகளில் 7116 இடங்கள் நிரப்பப்பட்டன. இதனுடன் 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களுக்கான மாணவர் களைத் தேர்தெடுத்தன. இவை படிப்படியாக வளர்ந்து 2008ம் ஆண்டு விண்ணப்பித்த 8,62,853 மாணவர்களில் 7,92,752 மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள்.
புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரி களைத் தவிர பழைய கல்லூரிகளில் உள்ள B.E/B.Tech படிப்பில் சுமார் 17,163 இடங்களும் B.Arch/B.Plan படிப்பில் 759 இடங்களும் நிரம்பின. பழைய கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது அவற்றில் 20 NITகளும், 5 IIIT& IIMகளும், சுமார் 16 தனியார் பல்கலைக் கழகங்களும் 14 மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளும் அடங்கும். கல்லூரிகளின் விபரத்தை www.cbse.nic.in என்ற தளத்தில் பார்க்கலாம்.
2008, 2009ம் ஆண்டு பிளஸ்டூ முடித்தவர் களும், 2010ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வு எழுத இருப்பவர்களும் இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதி உடையவர்கள். 2007ம் ஆண்டு பிளஸ்டூ முடித்தவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள்.
கடந்த வருடம் இத்தேர்வு நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது இந்த வருடம் இத்தேர்வு 05.12.2009 முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை அனுப்ப 10.01.2010 அன்று கடைசி நாளாக இருக்கலாம்.
B.E/B.Tech படிப்பிற்கான தேர்வையோ அல்லது B.Arch/B.Plan படிப்பிற்கான தேர்வையோ மட்டும் எழுத விரும்பும் பொதுபிரிவினர் (OC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்கள் ரூ450யையும், எஸ்.சி, எஸ்டி மாணவர்கள் ரூ225யையும் தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
இரண்டு நுழைவுத்தேர்வையும் சேர்த்து எழுத விரும்பும் OC மற்றும் OBC மாணவர்கள் கூடுதலாக ரூ.300க்கும் SC/ST மாணவர்கள் ரூ150க்கும் ஆன வரைவு காசோலையை (DD) விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். இதனைப்பற்றிய முழு விபரங்களை www. cbse.nic.in அல்லது www.aieee.nic.in என்ற தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு பற்றிய விபரங்கள்
•இது நாடு தழுவிய தேர்வு என்பதால், எல்லா மாநிலங்களிலும் எந்த வகை பள்ளித் திட்டத்திலும் 11, 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் படித்திருக்க கூடிய பொதுவான பாடப்பகுதிகளை உள்டக்கிய பொது பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
•மாணவர்கள் மத்தியில் ஓர் தவறான எண்ணம் என்னவென்றால் CBSE மாணவர்கள் மட்டுமே இந்த நுழைவுத்தேர்வை எழுத முடியும் என்பதாகும். ஆனால் அனைத்து மாணவர்களும் இத்தேர்வை நன்றாக எழுத முடியும்.
•கேள்வி முறையில் முதல் வகை, 4 விடைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் Objective Type முறை ஆகும்.
•ஒவ்வொரு தவறான விடைக்கும், சரியான விடைக்குரிய மதிப்பெண்ணில் கால்பகுதி (1/4) குறைக்கப்படும்.
•நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்க வேண்டும். விடையளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது.
•புதிய முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்த மதிப்பெண் 432 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
•ஓவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகள் 30 ஆக குறைக்கப்பட்டு 3 பிரிவுகளில் மொத்த மாக 90 கேள்விகள் கேட்கப்பட்டன.
•தமிழ்நாட்டில் 7 முக்கிய நகரங்களில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நேரிடையாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். இன்டர்நெட் வசதி உள்ளவர்கள்
ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
Assistant Secretary (AIEEE)
Central Board Of Seconday Education,
PS. 1-2 institutional Area,
IP Entonsionl Patparganj, Delhi 110092
Telephone No: 011 – 22239177-80
Extn: 110, 151, 157
தமிழ்நாட்டில் உள்ள NIT திருச்சியில், Chemical, Civil, Computer, EEE, ECE, IC, Mech, Metallury & Production ஆகிய துறைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர் களைக் கொண்டு நிரப்பபடுகின்றன.
அடுத்த இதழில் IITல்மாணவர் சேர்க்கைக்கு 11.04.2010 அன்று நடைபெற இருக்கும் நுழைவுத்தேர்வான IIT – JEEயை பற்றி விரிவாக பார்ப்போம்.
இளைஞனே!
உன்
சிந்தனை
சின்னதாக இருந்தாலும்,
இதுவரை
சிந்திக்காததாக இருக்கட்டும்!
நீ
சந்திக்கும்
மனிதனுக்கு முன்
சாக்ரட்டீசாக நில்!
அரிய நிகழ்வாக,
அவ்வப்பொழுது,
அடையாளப்படுத்து உன்னை!
துணிவு
மரமா நீ!
காய்த்துக்காட்டு.
விறகா நீ!
எரிந்து காட்டு.
மழையா நீ!
பொழிந்து காட்டு.
புலியா நீ!
பாய்ந்து காட்டு.
அட,
மனிதனா நீ!
துணிந்து காட்டு.
www.tamildict.com
தளத்தில் பதிவு செய்துகொண்டால் தமிழ் மட்டுமல்லாது German மொழிக்கும் அர்த்தங்கள் கிடைக்கிறது. பல்வேறு தலைப்புகளில் சிறிய, சுவையான தேர்வுகளும் எழுதலாம். புதிய வார்த்தைகள் அவ்வப்போது தளத்தில் Update செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பயனுள்ள இணையதளம்.
வரலாறு
கற்கால நாகரிகம் முதல் உலகப் போர்கள் வரை முக்கியமான செய்திகள் ஓரளவுக்கு எளிமையான ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. தகவல்களைத் தேடும் வசதி, கூடுதல் சிறப்பு. தளத்தைப் பற்றி நான் சொல்வதைவிட நீங்களே பார்த்துவிட்டுக் கருத்தளியுங்கள்.
www.india.gov.in
தளத்தை ஹிந்தியில் பார்க்கலாம் என (படிக்கத் தெரியாது!) க்ளிக்கினால் Not Found என்கிறது கணினி. பந்தாவுக்கு வைத்திருப்பார்கள். க்ளிக்கியது என் தவறு. ஆங்கிலப் பக்கத்தில் Text Size, Colour எல்லாம் நமக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். என் கருத்தில் நல்ல முயற்சி! பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகள்
உள்ளூர் ஊடகங்களையோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களையோ சர்வதேச அளவிலான மனிதஉரிமை ஆர்வலர்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இரும்புத் திரையிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை முதன்முறையாக இக்குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. வதைமுகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே இராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த Š அதிர வைத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தமது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும் இராணுவத்தின் கெடுபிடிகளும் வாய் திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா!'' என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர். இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு ஈழத்தில் நடக்கும் சிங்கள இராணுவ ஆட்சியின் அரச வன்கொடுமைகளை உலகரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு சிங்கள அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ. 500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வதைமுகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடித் தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.
சிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப்பும்
இந்தியாவில் தலித்துகள், மதச்சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் தடைகளைப் பற்றிய விவரங்களை இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். கல்வி, பொருளாதார மற்றும் அனைத்துவிதமான வளங்களிலிருந்தும் இவர்கள் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், பாலின ரீதியாகவும் விலக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் இவர்களின் அரசியல் பங்கேற்பு தடைபடுகிறது. தொழில் மற்றும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளை களைவதற்கு ஐநா மன்றம் வகுத்துள்ள கோட்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் ஓரளவு இந்த தடைகளை நீக்கியிருக்கிறது. இந்த மாமன்றம் தீர்வுகாணவேண்டிய சில பிரச்சினைகளை நான் இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.
சாதியம் என்பது ஆசியாவிலும், ஆப்பிரிகாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிற ஒரு விஷயமாகும். அது மதம், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம் என வாழ்வின் எல்லா தளங்களிலும் ஊருடுவி நாட்டின் வளர்ச்சியையே பாழாக்கி வருகிறது. தலித்துகளும், சிறுபான்மையினரும், பெண்களும் சமூக பொருளாதார நிறுவனங்களில் தலைமை பாத்திரத்தை வகிக்கமுடியாதபடி இந்த சாதியம் ஒரு மனோபாவத்தை உருவாக்கிவிடுகிறது. இது ஆராயப்படவேண்டும். இதை களைவதற்கான வழிவகைகள் காணப்படவேண்டும்.
ஆசிய நாடுகள் சிலவற்றில் தலித்துகளுக்கு அரசியல் ரீதியான இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாத்தையும், கிறித்தவத்தையும் தழுவிய தலித்துகளுக்கு இந்த உரிமை அடிபட்டுவிடுகின்றது. இது ஒரு மோசமான மனித உரிமை மீறலாகும். இந்த பாகுபாட்டை இம்மாமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தலித் பெண்கள் அரசியல் தளத்தில் பங்கேற்கும்போது அவர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தும்போதும் அவர்கள் மீது வன்முறை ஏவப்படாமலும் அவர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகாமலும் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும். பெண்களுக்கு சொத்துரிமையை உறுதிப்படுத்துவதோடு அவர்களின் அரசியல் பங்கேற்பை உத்தரவாதப்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.
ஒரு நாட்டில் சிறுபாண்மையின மக்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அந்த நாட்டை உலகம் மதிப்பீடு செய்யும். இலங்கையில் உள்ள தமிழ்ச்சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஐநா மாமன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பதிலாக ராணுவ ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறியது மட்டுமின்றி எண்ணற்ற தமிழர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிவிட்டது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெறும் வாய்ப்பை நான் பெற்றேன். அங்கு ராணுவத்தால் நிர்வகிகக்கப்படும் இடைத்தங்கல் முகாம்களில் தமிழ்ச்சிறுபான்மை மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை நான் பார்த்தேன். அந்த முகாம்களில் இன்னும் இரண்டு லட்சம்பேர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் அவர்கள் ராணுவத்தால் சித்தரவதை செய்யப்படுகிறார்கள். அங்கே வதை முகாம்களில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்படும் தமிழர்கள் குறித்து சர்வதேச சமூகம் இன்னும் போதுமான அளவில் விழிப்புணர்வை பெறவில்லை. மனித குலத்திற்கு எதிரான இந்த வன்முறையை அது கண்டிக்கவும் இல்லை. அங்கு வாழும் சிறுபான்மை தமிழர்களும், இஸ்லாமியர்களும் இன ரீதியான சிறுபான்மையினர் என்று அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுக்கு அரசியல் ரீதியான சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும்.
தலைவர் அவர்களே, தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வார்த்தைகளை கூறி என் உரையை முடிக்க விரும்புகிறேன். "இந்த ஜனநாயகத்தில் நாம் அரசியல் சமத்துவத்தை அடைந்திருக்கிறோம். ஆனால் தீண்டாமை என்னும் கொடுமை தொடர்வதால் சமூக பொருளாதார தளங்களில் ஏற்றத்தாழ்வும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த முரண்பாட்டை விரைவில் நாம் தீர்த்தாகவேண்டும்."
கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)
சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோப்பெருஞ்சிங்கன் என்கிற அரசனை பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலை படித்தேன், கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர் எதுவும் நினைவில்லை ச்ச்எனினும் சில நாட்களுக்கு முன் அதை நூலகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை, எனவே அந்த நூலில் கூறப்பட்டிருந்தவற்றை என் நினைவிலிருந்தும் மற்றவற்றை வரலாற்று நூல் ஆதாரங்களுடனும் எழுதுகின்றேன்.
கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)
தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை.
கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.
வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான்.
அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான், சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று.
கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை.
ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.
இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.
பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர்.
அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்
தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார்.
சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.
முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா?
எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்)
பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)
அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.
டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்
"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான் பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"
(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.)
"பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்"
(பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது)
இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது?
அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?
மேற்கோள் நூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை
தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்
கழட்டுகிறார்.
” ஆடைகளைக் கழட்டுங்கள்”
புன்னகையுடன் ஒத்துழைக்கிறார்.
சாதாரணக் குடிமகனைக்கூடக் கோபப்படுத்தும் நிகழ்வு. முன்னாள் முதல் குடிமகன், பாரத ரத்னா, டாக்டர்.அப்துல் கலாம் மேலே சொன்னவற்றைப் புன்னகை மாறாமல் செய்திருக்கிறார். இடம்: டெல்லி விமான நிலையம்.
நடந்தது நியூயார்க்கில் அல்ல நண்பர்களே! டெல்லியில். பாராளுமன்றம் கண்டித்திருக்கிறது. Continental Airlines மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
”எங்களது விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனைகள். டாக்டர்.கலாமையோ, இந்திய மக்களின் நம்பிக்கைகளையோ புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. எங்கள் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்டு விட்டோம். வருங்காலத்தில் எங்கள் விமான சேவையைப் பயன்படுத்துவார் என நம்புகிறோம்” - Continental Airlines.
விருந்துக்கு அழைத்து விஷம் வைத்தது போன்ற செய்கை. இதில் மன்னிப்பு கேட்கிறார்களாம்! அமெரிக்கக் குரூரங்கள் குறைவதில்லை! தேசம் பெரிதும் மதித்துப் போற்றும் மனிதருக்கே இந்த நிலை! சரிந்தது பொருளாதாரம் மட்டுமல்ல; அறிவும்தான் என அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.
சோதித்த ஊழியர்களைப் பதவிநீக்கம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் முறையான நடவடிக்கை. செய்வார்களா? இதுபோன்ற முட்டாள்தனங்கள் தொடர்ந்தால் அமெரிக்கா இன்னும் இன்னும் இழப்புகளைச் சந்திக்கும்!